முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை பிரதமர், சட்ட மாஅதிபருக்கு வழங்குகியமையினால் சபாநாயகரின் பொறுப்பை பிரதமர் அபகரித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
முறிகல் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை 2017 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு சுனில் ஹந்துன்னெத்தி சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது பாராளுமன்றத்தின் ஒரு ஆவணம் என சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணம் தொடர்பில் சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால், அதுகுறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் அல்ல எனவும் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனைத்து பிரதிநிதிகள் சார்பாகவும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, சபாநாயகர் வசமுள்ளமையால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதனை விவாதத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்த விடயம் பின்வருமாறு…
இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்ப வேண்டுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இல்லை. இது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல. இது பாராளுமன்றத்தின் செயற்பாடாகும். ஆகவே இதன் முழுமையான பொறுப்பை சபாநாயகருக்கே உள்ளது. சபாநாயகர் பாராளுமன்றத்தின் நிலைமைகள் தொடர்பில் நன்கு அறிந்தவர். ஆகவே அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு தீர்மானம் எடுக்கும் உரிமையை பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரியுள்ளேன்

