அரசியல் யாப்பு 20வது திருத்தம் வட சபையிலும் நிராகரிப்பு




இலங்கையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியல் யாப்பின் 20-வது திருத்தத்தை வடக்கு மாகாண சபை வியாழக்கிழமை நிராகரித்தது. கிழக்கு மாகாண சபையில் விவாதம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மாகாண சபைகளின் அங்கீகாரம் தேவையில்லை. இருந்த போதிலும் ஜனாதிபதி செயலகத்தினால் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக அது அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 31ம் தேதி அரசியல் யாப்பு 20வது திருத்தம் தொடர்பான மசோதா வட மாகாண சபையில் முன் வைக்கப்பட்டு 4ம் தேதி விவாதிக்கப்பட்டு வியாழக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
"தற்போதுள்ள நிலையில் திருத்த சட்டத்தை ஏற்க முடியாது. திருத்தங்கள் செய்யப்பட்டு அனுப்பி வைத்தால் பரிசீலிக்கப்படும்"என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் சபையில் அறிவித்தார்.
அதே வேளை கடந்த 29ம் தேதி கூடிய கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 20வது திருத்த மசோதாவை வியாழக்கிழமை சபையை சிறப்பு அமர்வாக கூட்டி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில் விவாதம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபையின் சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரலில் குறித்த திருத்தம் தொடர்பான பொருள் இரண்டாவதாக இடம் பெற்றிருந்தது. அது விவாததிற்கு எடுக்கப்படாமை குறித்து எதிரணி உறுப்பினரான டி.வீரசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.
உரிய நேரத்தில் விவாதிக்கப்படும் என அவைத் தலைவரால் பதில் அளிக்கப்பட்டது.
அவ்வேளை சபையில் சில நிமிடங்கள் அமைதியற்ற நிலை காணப்பட்டது.
ஏற்கனவே வட மத்திய மாகாண சபை மட்டும்தான் அரசியல் யாப்பு 20வது திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தென் , மற்றும் ஊவா மாகாண சபைகள் நிராகரித்துள்ளன. சப்ரகமுவ , மத்திய , மேல் , வட மேல் மாகாண சபைகள் திருத்தங்களைக் கோரியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இதே வேளை அரசியலமைப்பு 20வது திருத்தத்திற்கு எதிராகவும் அதனை சவாலுக்கு உட்படுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் என 13 மனுதாரர்களினால் சட்ட மா அதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
20வது திருத்தம் அரசியல் யாப்புக்கு விரோதமானது என்று அந்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், நாடாளுமன்றத்தில் 2/3 பெருன்பான்மையுடன் இது குறித்து சர்வசன வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் புதன்கிழமை ஆரம்பமான இந்த மனுக்கள் மீதான விசாரணை, வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது.