"கட்டியைக் கர்ப்பம் என சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு”



#India #Court
வயிற்றில் உள்ள கட்டியை கர்ப்பம் எனக் கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்களுக்கு எதிராக ஒரு பெண் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"எனக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறி தெரிந்ததால், அதே ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் நான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். எனக்கு நவம்பர் 18-ந்தேதி பிரசவம் நடைபெற வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள். தொடர்ந்து கஸ்தூரிபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன்.சீமந்தம் செய்து மகிழ்ந்தனர். 
குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரும் எனக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி என்னை பரிசோதித்த கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நான் கர்ப்பம் அடையவில்லை. அடிவயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக கூறினார்கள். இதைக் கேட்டு எனது குடும்பமே அதிர்ச்சியடைந்தது.கர்ப்பம் அடைந்ததாக கூறியதால், டாக்டர்கள் பரிந்துரை செய்த மாத்திரை, மருந்துகளை 8 மாதங்களாக சாப்பிட்டு வந்தேன்.தவறான பரிசோதனையால், எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என்று சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த அசினா பேகம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.