வெள்ளக்காடானது,மட்டக்களப்பு


வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பட்டிருப்பு – பெரியபோரதீவு பிரதான வீதி, பெரியபோரதீவு- பழுகாமம் பிரதான வீதி, வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்முனை –கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, மாடிமுன்மாரி – தாந்தாமலை பிரதான வீதி, வலையிறவு - வவுணதீவு பிரதான வீதி, மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான வீதி, என்பவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால், குறித்த வீதிககளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும்  மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்த மழை பெய்து வருவதனால், தாழ் நிலங்களில்  அமைந்துள்ள முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதிவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (09) காலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப்  பகுதியில் 75.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 44.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 79.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 67.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 85.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 38.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 35.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 13.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில 45.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 140.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கதிரவெளிப் பகுதியில் 19.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக,வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.