அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில்

பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோருக்கு பிணை வழங்கி, கொழும்பு கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும் செல்வதற்கு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சந்தேகநபர்கள் வௌிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பிணைதாரர்களாக ஆஜராகும் நால்வரில் இருவர் சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான் நிபந்தனை விதித்துள்ளார்.

மத்தியவங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும், நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வாறாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவுசெய்யப்பட்டு குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படும் வரை, எந்தவொரு சந்தேகநபரும் தான் நிரபராதி என்பதற்கான முழுமையான தீர்மானத்தில் இருக்க முடியும் என பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, சட்டமா அதிபரின் பரிந்துரைகளை நிராகரித்த நீதவான் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரண்டு சந்தேகநபர்களும் கடந்த 11 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளின் நோய் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கையை விசேட காரணியாக ஏற்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், இந்த வழக்கை நிறைவுசெய்வதில் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதம நீதவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


--- Advertisment ---