காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை மிரள வைத்த துபாய் சிறுமி என்ற தலைப்பில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் சனிக்கிழமை முதல் உலவியது.
ராகுல் இரண்டு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அந்த பயணத்தில் இந்தியர்களுடன் உரையாற்றும் போது, ஒரு 14 வயது சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" என்று கேட்டதாக விவரித்தது அந்த செய்தி.
இதனை தமிழின் பிரபல நாளிதழ்களும், "துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்" மற்றும் "ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி" என்ற தலைப்புகளில் ஒரு சிறுமியின் படத்துடன் வெளியிட்டன.
உண்மையில் ராகுலை மிரள வைத்தாரா அந்த சிறுமி?
"இல்லை" என்று தான் தரவுகள் கூறுகின்றன.
சரி. செய்திதாள்கள் வெளியிட்ட செய்தி என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
அந்த செய்தி?
இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது திருநீறு அணிந்து கோயிலுக்கு சென்றீர்கள், காஷ்மீருக்கு சென்ற போது குல்லா அணிந்தீர்கள். இது ஏன்? என்று அந்த சிறுமி கேட்டதாகவும், அதற்கு ''அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்,'' என்று ராகுல் கூறியதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.
DINAKARAN
சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" இதைக் கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. சிரித்த முகமாகவே இருந்தார்.மேலும் அந்த சிறுமி, 'நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பின்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது நீங்கள் 'மதவாதம்' என பிரசாரம் செய்யாமல் 'ஊழல் இல்லாத இந்தியா' என ஓட்டு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பர்' என்றார்.
சிறுமியின் பேச்சை பார்வையாளர்கள் பாராட்டினர்.இதற்கிடையே சிறுமியின் துடுக்கான கேள்விகளை தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கான நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.
BILAL ALIYAR
இதே செய்தியை தினகரன் நாளிதழும் வெளியிட்டுள்ளது.
தினகரன்- தினமலர்:துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்
- தினகரன்:ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி: இத்தனை ஆண்டுகள் செய்யாததையா இனிமேல் நீங்கள் செய்ய போகிறீர்கள்?
இணையதளங்களான 'மை நேஷன்' மற்றும் 'போஸ்ட் கார்ட்' ஆகியவற்றிலும் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
- மை நேஷன்:Girl asks RaGa tough questions in Dubai, Congress overseas secy office confirms it
- போஸ்ட் கார்ட்:Deadly Dubai! Congress party had to stop the live telecast of Rahul Gandhi from Dubai just because he couldn't answer a 14 year old girl's tough questions
"காணொளி சாட்சி"
கையில் மைக்குடன் ராகுலிடன் கேள்வி கேட்பதாக இருக்கும் அந்த சிறுமி, உண்மையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை.
KIDS & STAGE
அந்த சிறுமியின் புகைப்படம் ஒரு யூ- டியுப் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
பாலின பாகுபாடு குறித்து அந்த காணொளியில் அந்தச் சிறுமி பேசுகிறார்.
அந்த காணொளியானது, KidsandShare யு- டியூப் சேனலால் தரவேற்றப்பட்டுள்ளது.
உண்மையில் அங்கு நடந்தது என்ன?
ராகுல் மூன்று இடங்களில் உரையாற்றி இருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் சமூகத்துடன் மற்றும் ஆயிரகணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
தொழிலாள சமூகத்துடன் முதலில் பேசிவிட்டு பின் அந்த மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
ஆயிரக்கணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசினார்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் அவ்வாறான கேள்வி எழுப்பப்படவில்லை.
துபாயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிலால் அலியாருடன் பேசினோம்.அவர், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்வில், உண்மையில் அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவே இல்லை. வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு ராகுல் பேச தொடங்கினார். அந்த பேச்சில் சகிப்புத்தன்மையின் தேவை. இந்திய வள்ர்ச்சியில் என்.ஆர்.ஐ-இன் பங்கு குறித்து பேசினார்"என்றார்.
BILAL ALIYAR
அந்த நிகழ்வில் வேறு யாரேனும் கேள்வி எழுப்பினார்களா என்ற நம் கேள்விக்கு, " முறையான கேள்வி பதில் அமர்வு எல்லாம் இல்லை. ஆனால் உரை முடிந்த பின் ஒருவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று சொன்னார்" என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
BILAL ALIYAR
செய்திதாள்களில் வெளியிட்டது போல அந்த இறுமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றார் பிலால்.




Post a Comment
Post a Comment