அடக்குமுறைகளைத் தடுக்க சர்வதேசத் தலையீடு தேவை!


“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதேவேளை, தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைக்கான ஆஸ்திரேலியாத் தூதுவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹொலிவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே நேற்று சந்திப்பு நடைபெற்றது. அதிலேயே இவ்வாறு வலியுறுத்தினேன் என்று ‘புதுச்சுடர்’ செய்திச் சேவைக்கு இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பிலுள்ள எனது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் மற்றும் இலங்கை விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு தொடர்பில் விரிவாகப் பேசினோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து கைதுகள், சோதனைகள், கெடுபிடிகள் மற்றும் வன்முறைகள் தொடர்கின்றன. அவசரகாலச் சட்டத்தால் எமது மக்கள் ஒன்றும் செய்ய முடியாது அச்சத்தில் வாழ்கின்றனர். எனவே, இந்த அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.
பின்னணி என்ன?
கிறிஸ்தவ மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி என்ன? என்பது தொடர்பில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். உண்மைகள் மறைக்கப்படக்கூடாது. தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதலின் பின்னர் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதைக் காணொளிகள் ஊடாகக் காணமுடிகின்றது.
குற்றவாளிகள் அனைவரும் 
தண்டிக்கப்பட வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் அரசியல் பின்னணியில் அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. யார் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு இன, மத, பதவி வேறுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும். இதை சர்வதேச சமூகமும் வலியுறுத்த வேண்டும் எனவும் ஆஸ்திரேலியாத் தூதுவரிடம் எடுத்துரைத்தேன்.
காணி விடுவிப்பும் 
மீள்குடியேற்றமும்
வடக்கு, கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களின் காணிகள் தொடர்பிலும் பேசினோம். காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் மீள்குடியேற்றம் முழுமை பெறும் எனவும் குறிப்பிட்டேன்.
தமிழ் அரசியல் கைதிகள் 
விடுவிக்கப்பட வேண்டும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. மன்னிப்பின் அடிப்படையில் அவர்களை அரசு விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
வாக்குறுதிகள், பரிந்துரைகள் 
நிறைவேற்றப்பட வேண்டும்
சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதை நிறைவேற்றுவதிலிருந்து விலக முடியாது. எனவே, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து கடும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவற்றை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களையும் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். தேவையற்ற விதத்தில் காலங்கள் கடத்தப்படுவதை – இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
நிரந்தர தீர்வு 
வேண்டும்
அதேவேளை, இலங்கையில் நீண்டகாலம் தொடரும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண அரிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியிலிருக்கும் அரசுக்கு நாம் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தோம். எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்தக் கருமத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை அரசுக்கு நாம் தொடர்ந்து வழங்குவோம். அரசும் இந்தக் கருமத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்காக எம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். புதிய அரசமைப்பு நிறைவேறாவிடின் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. எனவே, ஒருமித்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம். நாடு பிளவுபட்டு நிற்க நாம் விரும்பவில்லை. எனினும், நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு வந்தால் மட்டுமே நாமும் எமது மக்களும் ஆதரிப்போம்.
ஆஸ்திரேலியாவை 
மறக்கமாட்டோம்
இலங்கை விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் பங்களிப்புத் தொடர வேண்டும். ஆஸ்திரேலியா தம்மாலான உதவிகளை இலங்கைக்கு வழங்க வேண்டும்.
கொடூர போரால் ஏதிலிகளாக்கப்பட்ட எமது தமிழ் உறவுகள் பலருக்கு ஆஸ்திரேலியா புகலிடம் வழங்கியுள்ளமையை நாம் மறக்கமாட்டோம். இதை நன்றியுணர்வோடு நாம் நினைவுபடுத்துகின்றோம் என்றும் தூதுவரிடம் தெரிவித்தேன்.
எனது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட தூதுவர், நான் தெரிவித்த அனைத்து விடயங்களையும் ஆஸ்திரேலியா அரசின் கவனத்துக்கு உடன் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்” – என்றார்.