நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்தில் 5 ரன் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

கிராண்ட்ஹோம்

5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது. ஆனால் அணியின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது.

நீஷம் கடைசி வரை நின்று போராட நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது. நீஷம் 112 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஷாஹீன் அப்ரிடி

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. 1992 உலகக்கோப்பையில் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாகிஸ்தான்தான். அந்த வரலாற்றை இன்று நியூசிலாந்து மாற்றி எழுதுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


--- Advertisment ---