நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி!


“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.”
– இவ்வாறு பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“107 அமைச்சரவைப் பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும். ஆனால், அமைச்சரவையைக் கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார். இது அப்பட்டமான அரசமைப்பு மீறல். அத்துடன், நாடாளுமன்றத்தைச் சவாலுக்குட்படுத்தும் செயல்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி மாற்ற முடியாது. தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.
கடந்த ஒக்டோபர் 26இல் நடந்த அரசமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்புப் போல், அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் போல் இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகின்றது.
இவ்வார முடிவுக்குள் அனைத்துத் தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையைக் கூட்ட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் இந்த ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசமைப்பை மீறிச் செயற்பட வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்” – என்றார்.