கூடுகின்றது அமைச்சரவை!


அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தத் தகவல் இன்று பகல் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
விசேட அமைச்சரவைக் கூட்டம் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும்வரை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தமாட்டேன் என்று அன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதனால், பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை.
இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதேவேளை, அடுத்த வாரமும் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட பிரேரணையொன்றை முன்வைத்துவிட்டு தனக்கிருக்கும் அதிகாரங்களுடன் தற்றுணிவாக அமைச்சரவையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றார் எனத் தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி தரப்பால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.