வாகன விபத்தில் இளைஞன் பலி - சாரதி கைது

(க.கிஷாந்தன்)
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 15.06.2019 அன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நீர்க்கொழும்பில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த அரச பேருந்தொன்றில் மோட்டர் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தில் இருந்து ரஞ்ஜுராவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் பேருந்தில் மோதியதையடுத்து பேருந்தின் பின்பக்க சில்லில் குறித்த இளைஞர் சிக்கியுள்ளார்.
பின்னர், படுகாயமடைந்த நிலையில் அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கினிகத்தேனை அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


--- Advertisment ---