உடல்மொழியிலேயே தோற்றுப்போன இலங்கை!


16-வது ஓவரிலிருந்து 32-வது ஓவர் வரையான ஓவர்கள் தான் ஆட்டத்தில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தியது. அந்த இடைப்பட்ட 16 ஓவர்களில் இலங்கை அணி 47 டாட் பால்கள் ஆடியது. கிட்டத்தட்ட பாதி பந்துகள் டாட் பால்களாகவே அமைந்தன.

உடல்மொழியிலேயே தோற்றுப்போன இலங்கை! ஆஸ்திரேலியா வென்றது எங்கே?! #SLvAUS
உடல்மொழியிலேயே தோற்றுப்போன இலங்கை! ஆஸ்திரேலியா வென்றது எங்கே?! #SLvAUS
பவர் ப்ளே ஓவர். லசித் மலிங்காவின் பந்தை அழகாக ஸ்ட்ரோக் வைக்கிறார் ஆரோன் ஃபின்ச். கவர் பொசிஷனில் இருந்த இலங்கை அணி கேப்டன் கருணரத்னே அதைப் பிடிக்கிறார். பொதுவாக சர்க்கிலுக்குள் ஃபீல்டிங் செய்யும் போது ஒரு ஃபீல்டர் பந்தை பிடித்தால், ஸ்டம்பை நோக்கி வீசுவதைப் போல் பாவனை செய்வார், அல்லது பந்தை கீப்பரிடம் வீசுவார். அதைக் கீப்பர் மற்றொரு வீரரிடம் வீசுவார். இப்படி பெளலர் அடுத்த பந்தை வீசச் செல்லும் அந்த இடைப்பட்ட தருணத்தில், பந்து குறைந்தது மூன்று ஃபீல்டர்களின் கைக்களைத் தாண்டி வந்திருக்கும். ஆனால் நேற்று இலங்கை கேப்டன் கருணரத்னே பந்தை பிடித்தவுடன் பந்தைக் கீப்பரிடம் வீசாமல் தன்னிடமே வைத்துக்கொள்கிறார். அவர் மட்டுமல்ல இன்னும் சில வீரர்களும் அதை தான் செய்தனர்.

இதனால் என்ன ஆகிவிடப்போகிறது? இந்த சின்ன விஷயங்கள் தான் ஃபீல்டிங் டீமிற்கு சுறுசுறுப்பை உண்டு செய்யும். பந்தை மாறி மாறி வீசுவதினால் ஒரு மொமன்டம் உண்டாகும். ஃபீல்டர்களின் சுறுசுறுப்பு பெளலருக்கும் ஒரு தெம்பு கொடுக்கும். எதிரி பலமாக இருந்தாலும், நாமும் அவர்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை குறைந்தபட்சம் நம் உடல்மொழியிலாவது காட்டவேண்டும். இவையெல்லாம் விளையாட்டின் சில அடிப்படையான விஷயங்கள்.

Karunaratne
Karunaratne
ஆனால் ஃபீல்டிங் செய்யும் போது இலங்கை வீரர்கள் அனைவரின் உடல்மொழியும் வேதனை அளிக்கும்படியாகவே இருந்தது. தோல்வி மனநிலையிலேயே செயல்பட்டது போல் இருந்தது அவர்களின் உடல்மொழி. அதற்கு, மேலே குறிப்பிட்ட ஒரு உதாரணம் போதும். இப்படி அடிப்படை விஷயங்கள் தொடங்கி பல சொதப்பல்களை செய்த இலங்கை இறுதியில் 87 ரன்கள் வித்யாசத்தில் அவர்கள் எதிர்பார்த்த தோல்வியயே சந்தித்தது.

குறி சரியாக வைக்கவில்லை!
ஒரு பெரிய டார்கெட்டை சேஸ் செய்யும் போது எதிரணியின் ஒரு பெளலரை டார்கெட் செய்து அவரை செட்டாகவிடாமால் செய்தாலே வேலை சுலபமாக முடியும். இலங்கைக்கு யாரை டார்கெட் செய்ய வேண்டும் என்று யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், பெரண்டார்ஃப் ஆகிய நான்கு ரெகுலர் பெளலர்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணியில் இருந்தனர். ஐந்தாவது பெளலராக பகுதி நேர ஸ்பின்னரான மேக்ஸ்வெல்லை தான் நம்பியிருந்தார் ஃபின்ச். ஏற்கனவே பவர் ப்ளே முடிவில் அந்த அணியின் முக்கிய பெளலர்கள் அதிக ரன்களை வழங்கியிருந்தனர். அழகாக அப்போது மேக்ஸ்வெல்லை டார்கெட் செய்திருக்கலாம்.

#SLvAUS
#SLvAUS
அப்படி மேக்ஸ்வெல்லை டார்கெட் செய்திருந்தால், அவருக்கு மாற்று பெளலரைக் கொண்டு வர அந்த அணியில் பெரிய குழப்பம் உண்டாயிருக்கும். சில வருடங்களாக அதிகம் பந்துவிசாமல் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் அல்லது ஃபின்ச்சே பந்துவீசியிருக்கும் நிலை உண்டாகியிருக்கும். ஆனால் இலங்கை அணி இங்கும் தங்களின் அனுபவமின்மையை காட்டியது.

பவர்ப்ளே முடிந்தவுடன் மேக்ஸ்வெல் பந்துவீச வருகிறார். பெரேரா – கருணரத்னே என இருவரும் நன்றாக செட்டாகியிருந்த போதும் மேக்ஸ்வெல்லை டார்கெட் செய்யாமல் அவரைப் பொறுமையாகவே அணுகினர். அது தேவையில்லாமல் அவர்களின் மேலே ஃபிரஷரை உருவாக்கியது. அதுமட்டுமல்லாமல் முதல் விக்கெட் விழுந்ததும் ஆஃப் ஸ்பின்னர் பந்து வீசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு இடதுகை பேட்ஸ்மேனான திரிமண்ணேவை இறக்கியது மற்றுமொரு தவறு.

#SLvAUS
#SLvAUS
அவருக்கு பதில் ஒன் டவுனில் குசல் மெண்டீஸை இறக்கியிருந்தால் ஆஃப் ஸ்பின்னரை இன்னும் கொஞ்சம் எளிதாக ஒரு வலதுகை பேட்ஸ்மேன் சமாளித்து ஆடியிருப்பதோடு வலதுகை - இடதுகை காம்பினேஷனும் அமைந்திருக்கும். ஆனால் அதையும் செய்யத் தவறியது இலங்கை. இரு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கும் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி ரன்களையும் கட்டுப்படுத்தினார். இதுதான் சாக்கு என மேக்ஸ்வெலுக்கு அடுத்தடுத்த ஓவர்களைக் கொடுத்து பிரச்சனையே இல்லாமல் ஐந்தாவது பெளலர் பிரச்சனையை தீர்த்துக்கொண்டார் ஃபின்ச். அதற்கு அழகாக வழிவகுத்தது இலங்கை.

மிடில் ஓவர் சொதப்பல்
ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது இலங்கை. குசல் பெரேரா 16-வது ஓவரில் அவுட் ஆனதும் இலங்கை அணி சரிவை கண்டது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும்போது, பார்ட்னர்ஷிப் அமைப்பது எப்படி முக்கியமோ அதேபோல் ரன்ரேட்டையும் கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருப்பது அவசியம். இரண்டிலும் இலங்கை அணி கோட்டை விட்டது. குசல் பெரேரா அவுட் ஆன போது 7.50-ல் இருந்த ரன்ரேட் அதன் பிறகு 6... பிறகு 5 எனக் குறையத்தொடங்கியது.

#SLvAUS
#SLvAUS
16-வது ஓவரிலிருந்து 32-வது ஓவர் வரையான ஓவர்கள் தான் ஆட்டத்தில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தியது. அந்த இடைப்பட்ட 16 ஓவர்களில் இலங்கை அணி 47 டாட் பால்கள் ஆடியது. கிட்டத்தட்ட பாதி பந்துகள் டாட் பால்களாகவே அமைந்தன. சரி டாட் பால்களுக்கு சரிக்கட்ட பவுண்டரிகள் அடிக்கப்பட்டதா என்றால் வெறும் மூன்று பவுண்டரிகள் மட்டுமேஅடிக்கப்பட்டது! 99 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

ஆஸ்திரேலியா இன்னிங்ஸை எடுத்துக்கொண்டால் அப்படியே உல்டா. இந்த இடத்தில் தான் ஆஸ்திரேலியா இலங்கையை ஓவர்டேக் செய்தது. மிடில் ஓவர்களில் ஃபின்ச் – ஸ்மித் ஜோடி 173 ரன்கள் சேர்த்தது(124 பந்துகளில்) ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம் இங்குதான் முக்கிய பங்கு வகிக்கிறது. திரிமண்ணே, குசல் மெண்டீசைப் போல் டாட் பால்கள் வைக்காமல் நன்றாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஃபின்ச் மீதிருந்த பாரத்தைக் குறைத்தார். 46 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

Finch
Finch
கிட்டத்தட்ட ஸ்மித் களமிறங்கிய போது என்ன நிலமையோ அதே நிலமை தான் திரிமண்ணே களமிறங்கிய போதும் இருந்தது. ஆனால் திரிமண்ணே 26 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்(ஸ்ட்ரைக் ரேட் 61). ஸ்மித்தைப் போல் திரிமண்ணே அல்லது குசல் மெண்டீஸ் அதிக டாட் பால்கள் ஆடாமல், அழகாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடியிருந்தால் கருணரத்னேவும் ஃபின்ச்சைப் போல் கியர் மாற்றி அதிரடியாக ஆடியிருக்கக்கூடும். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அந்த டாட் பால்களால் ரன்ரேட்டும் கூட அடுத்த வந்த பேட்ஸ்மேன்களுக்கும் ப்ரஷரை உண்டாக்கியது.

ஃபின்ச்சின் கேப்டன்ஸ் நாக் – ஸ்மித்தின் ஆங்கர் ரோல்!
எதிர்த்து விளையாடும் அணி கொஞ்சம் பலவீனமான அணிதான். இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியில் நம்பிக்கைமிக்க ஐந்தாவது பெளலர் இல்லை. மிச்ச நான்கு பெளலர்களிலும் ஒருவருக்கு அன்றைய நாள் சரியாக அமையவில்லை என்றாலும் அது பெரும் ஆபத்தாக முடியும். அந்த ரிஸ்கை குறைக்க வேண்டுமானால் எதிரணிக்கு பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க வேண்டும். அப்படியொரு சூழ்நிலையில் கேப்டனாக தன் பொறுப்பை உணர்ந்து வேற லெவல் ஆட்டம் ஆடினார் ஃபின்ச்.

Finch
Finch
எப்போதும் பிட்ச் ஆகி தன்னை நோக்கி வரும் பந்துகளை எதிர்கொள்ளத் தடுமாறும் ஃபின்ச், நேற்று ஃப்ரெண்ட் ஃபூட்டில் ஆடிய ஸ்ட்ரைட் ட்ரைவ்கள் எல்லாமே முழு பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. 132 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடினார். ‘இன்னால் கேப்டன்’ ஃபின்ச்சின் அதிரடிக்கு, ‘முன்னால் கேப்டன்’ ஸ்மித் அழகாக கம்பெனி கொடுக்கு, இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் 334 ரன்கள் அடிக்க அந்த பார்ட்னர்ஷிப் தான் அஸ்திவாரமாக அமைந்தது.

வெற்றிதான்..இருந்தாலும்!
வெற்றிபெற்றிருந்தாலும் இன்னும் ஆஸி. அணியின் வீக்னஸ் அப்படியே தான் இருக்கிறது. வார்னர் நேற்று மீண்டும் ஒரு ஆமை வேக ஆட்டம் ஆட, பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்படி அந்த அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியதோ அதே போல் நேற்றும் ஆட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் 360 என்கிற ஸ்கோர் எடுப்பார்கள் எனக் கணிக்கப்பட்டது ஆனால் கடைசி நான்கு ஓவர்களில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸி. இறுதியில் 334 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வார்னர், ஃபின்ச் மற்றும் ஸ்மித் ஆகிய மூவரையே பெரிதும் நம்பியிருக்கிறது அந்த அணி.

Steve Smith
Steve Smith
அதே போல் பெளலிங்கில் ஸ்டார்க், கம்மின்ஸ் கூட்டணியையே பெரிதும் நம்பியிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா எடுத்த 44 விக்கெட்டுகளில் இந்த இருவர் கூட்டணி மட்டும் 24 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இந்த போட்டியிலும் ஸ்டார்க் தான் திருப்புமுணை தந்தார். புள்ளிப்பட்டியிலில் நம்பர் 1 இடத்தை அடைந்திருக்கும் ஆஸ்திரேலியா, அதைத் தக்கவைக்க இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும். மறுபக்கம் கத்துக்குட்டியாக மாறிக்கொண்டிருக்கும் இலங்கையோ அடிப்படையிலிருந்த தொடங்க வேண்டும்!