சங்கானையில் கண்காணிப்பு


(பாறுக் ஷிஹான்)
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி, இணைந்து திங்கட்கிழமை (19) உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள், உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் அசுத்தமாகவும், சமைத்த உணவுகள் பிளாஸ்ரிக் பாத்திரங்களில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் அழுகிய மரக்கறிவகைகள் சமையல் பாவனைக்கு பயன்படுத்தபட இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 1 உணவகத்தில் காணப்பட்ட தகுதியற்ற ரொட்டிகள் மற்றும் மரக்கறிவகைகள் அழிக்கப்பட்டன.
மேலும், சுகாதார சீர்கேடுகளுடன் தரமற்று காணப்பட்ட ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மனிதனுக்கு அடிப்படையான தேவை உணவு. பெரும்பாலான உணவகங்கள் சீர்கேடுகளுடன் காணப்படுவதால் அவை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்குமாறும் தவறும் பட்சத்தில் இவ்வாறான விஜயத்தின்போது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கள் தொடரும் என்றும் தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் இது தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.