Showing posts with label Eastern Sri லங்கா. Show all posts


 அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையிலும், கிட்டங்கி தாம்போதி நன்னீர் குளங்களில் மீன்பிடி பாதிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


காலையிலும் பிற்பகலிலும் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதோடு தரமான செப்பலி மீன்களைப் பிடித்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்று வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் காற்று வேகமாக வீசினாலும் நன்னீர் மீன்பிடிக்கு இவை பாதிப்பாக அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை பிரதேச மக்கள் இங்கு வருகைதந்து மீனை கொள்வனவவு செய்து வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.


மட்டக்களப்பு பிரதேச வாவிகளில் பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள்.பண்டிருப்பு சந்தைகளில் விற்கப்படுதோடு அதற்கு நல்ல கிராக்கியும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


(நற்பிட்டிமுனை செய்தியாளர்)


 நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மாளிகைக்காடு பொது அமைப்புக்களின் சம்மேளனம் தவிசாளருக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டார்.

மாளிகைக்காடு மையவாடி விவகாரம் தொடர்பில் பிரதேச மக்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மையவாடி என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான சமய மற்றும் பண்பாட்டு அடையாளமாக மட்டுமன்றி, தலைமுறைகளுடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான பொதுச் சொத்தாகவும் காணப்படுவதால், அது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கி, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, மாளிகைக்காடு மக்களின் நீண்டகால தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்திற்கொண்டு, மையவாடி தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரமானதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களுடன் பள்ளிவாசல் தலைமைகளும் ஊர் பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அதேவேளை, பிரச்சினையை எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், சட்டரீதியான நடைமுறைகளுக்கு அமைவாகவும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைப் பாதிக்காத வகையிலும் அணுக வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

மாளிகைக்காடு மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் பிரதேசத்தின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து கலந்துரையாடி உரிய தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மாளிகைக்காடு மையவாடி விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்புகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியமை, பிரச்சினையை புரிந்துணர்வு மற்றும் கலந்துரையாடல் ஊடாகத் தீர்ப்பதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

எதிர்கால நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு, மாளிகைக்காடு மக்களின் நலனையும் சமூக ஒற்றுமையையும் முதன்மைப்படுத்தி தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டுமெனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

 நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு-07 திருமால்முக வீதியின் புனரமைப்புப் பணிகளை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார். டித்வா பேரிடர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 09 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வீதி புனரமைப்புப் பணிகள் காரைதீவு பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றன.

கடந்த கால வெள்ளப்பெருக்கினால் இப்பகுதி மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களின் வரிப்பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், புனரமைப்புப் பணிகள் அனைத்தும் உரிய தரநிலைகளுக்கு அமைவாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த தாமும் பிரதேச சபை அதிகாரிகளும் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி புனரமைப்பு நிறைவடைந்த பின்னர், குறித்த பகுதியில் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், எதிர்காலத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி


பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (18) மாலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குப் பெண் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக,இன்று(10) மாலை கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் திங்கட்கிழமை(10) மாலை   பதிவு செய்யப்பட்டுள்ளன.



இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
எனினும், குறித்த சந்திப்பின் போது—நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.


சட்ட நடவடிக்கை தீவிரமடைகிறது


பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

> "நாளை அல்லது நாளை மறுதினம், அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் நோட்டீஸ்கள்  அனுப்பப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்."

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்  மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 



நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வரும் நிரந்தர மையவாடி பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) இரவு கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நிர்வாகத்தினரும், மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று விரிவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

மையவாடி வசதி என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை மத மற்றும் மனிதாபிமானத் தேவைகளில் ஒன்றாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை, இடப்பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு, மாளிகைக்காடு மக்களுக்கென நிரந்தரமான மாற்று மையவாடி ஒன்றை அமைப்பதற்கான அவசியம் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், அடையாளம் காணப்பட்ட பொருத்தமான காணிகளை சட்டரீதியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுதல், சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள், இவ்விடயம் எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தேவையாக அல்லாமல், முழு மாளிகைக்காடு சமூகத்தின் எதிர்கால நலனுடன் தொடர்புடைய பொதுநலக் காரியமாகக் கருதி, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல், ஸைத் பின் தாபீத் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கல்முனை முஹைய்யதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.எச்.எம். முபாரிஸ், பொருளாளர் எஸ்.எம். றிப்னாஸ், உப செயலாளர் ஏ.எம். லத்தீப் மற்றும் நம்பிக்கையாளர்கள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை பிரதானிகள், அரசியல் கட்சிகளின் பிரதேச அமைப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
மேலும், நிரந்தரத் தீர்வை விரைவாக எட்டுவதற்காக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நன்கொடையாளர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், இதற்கென ஒருங்கிணைந்த செயற்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணக்கப்பாடு எட்டியுள்ளது.
 

 


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரு தினங்களாக நடாத்தப்பட்ட விசேட இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாமில், சுமார் 550 நோயாளர்களுக்கு வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாணத்தின் சுகாதார வரலாற்றிலேயே மிகச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் Sammanthurai Golden City Lions Club, NAJA Residency, மரியம் Filling Station மற்றும் Farook Filling Station ஆகிய அமைப்புகளின் இணை அனுசரணையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இலங்கை கண் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விசேட கண் மருத்துவ நிபுணர்கள் நேரடியாக வருகை தந்து இச்சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட சிகிச்சைகள்

இச்சிகிச்சை முகாமின் முதற்கட்டமாக ஆகஸ்ட் 01 ஆம் திகதியன்று 300 நோயாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 02 ஆம் திகதியன்று 250 நோயாளர்களுக்கும் கட்டம் கட்டமாகச் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

மருத்துவக் குழுவினருக்கு விசேட கௌரவிப்பு

 கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் 'ஆரெம் பார்க்ஸ்' (RM Parks Inc.) நிறுவனம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று இன்று (30) திறந்து வைத்தது.


மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், RM Parks Pvt Ltd மற்றும் Shell நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எல். எட்வர்ட் சுசந்த சில்வா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பாதுகாப்பு முகாமையாளர், பிராந்திய முகாமையாளர் எம். குகராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இப் பகுதியில் அமைந்துள்ள சி.பி. ஹாலித் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய 'ஷெல்' (Shell) எரிபொருள் நிலையத்தின் முகவராகச் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகால ஒப்பந்தம் & பிரமாண்ட முதலீடு

இலங்கையில் நிலவிய கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாகவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையிலும் சில்லறை எரிபொருள் விற்பனைச் சந்தையை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 'ஆரெம் பார்க்ஸ்' நிறுவனம், உலகின் முன்னணி ஆற்றல் நிறுவனமான 'ஷெல்' (Shell PLC) உடன் இணைந்து இலங்கையில் 20 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சுமார் 110 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இச்செயற்றிட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றது.

200 எரிபொருள் நிலையங்கள் & நவீன வசதிகள்

இத்திட்டத்தின் கீழ் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) 150 எரிபொருள் நிலையங்கள் பொறுப்பேற்கப்படுவதுடன், புதிதாக 50 நிலையங்களை அமைக்கும் உரிமையையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

பொறுப்பேற்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பின்வரும் நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன:

தானியங்கி விநியோகக் கருவிகள் (Automated Dispensers)

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் (EV Charging Stations)

மினி சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கஃபேக்கள்

வங்கி ATM மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள்

இப்புதிய நடவடிக்கையின் மூலம் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்குச் சர்வதேச தரத்திலான சேவைகளும் தடையின்றி கிடைக்கும் என நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
--


  (எம்.என்.எம்.அப்ராஸ்) 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு "டெங்கற்ற கிழக்கு - பாதுகாப்பான சமூகத்தை நோக்கி "எனும் தொனிப் பொருளில் கட்சியின் இளைஞர் காங்கிரசின் ஏற்ப்பாட்டில் கல்முனையில் நேற்று (11)இடம் பெற்றது. 

 “டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், 2026 ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 09 வரை கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நல செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

இதில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளின் பங்களிப்புடன் டெங்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சுகாதாரம்,மக்கள் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தேசிய பொருளாளரும், உயர்பீட உறுப்பினர்களும்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகளும், பிரதேச அமைப்பாளர்களும்,இளைஞர் அமைப்பாளர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



(குமுக்கனிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)

 கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களின் நலன்கருதி கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகம் இணைந்து நடமாடும் வைத்திய முகாமை கானகத்தின் மத்தியில் உள்ள குமுக்கனில் நடாத்தி வருகின்றது. 

முகாமை வழிநடாத்தும் தலைவரான   கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத் தலைவருமான மருத்துவர் குண.சுகுணன் தலைமையிலான  குழுவினர் அர்ப்பணிப்புடன் இந்த சேவையை நடாத்தி வருகின்றனர்.

முதல் நாள் சுமார் 124 அடியார்கள் தமது முகாமிற்கு வந்து சிகிச்சை பெற்றதாக மருத்துவர் சுகுணன் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து காரைதீவு பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை விளக்கி காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளை கல்முனை நீதிமன்றங்களுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 13வது கூட்டம் இன்று (09) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் பொதுமக்களின் வீணான அலைச்சல், நிதி விரயம், போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்ட தூரம் ஆகியவற்றை தெளிவுபடுத்தி உடனடியாக இது தொடர்பிலான அடுத்த கட்ட மேலதிக நடவடிக்கை  எடுக்க சபைக்கு கோரிக்கை முன்வைத்தனர்.

தொடர்ந்தும் சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வழங்கும் போது சபையின் கீழுள்ள  சனசமூக நிலையங்கள் உரிய முறையில் இயங்காத நிலையிலும் புதிதாக உருவாக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றமையினால் வேலைகளை செயற்படுத்துவதற்கு அந்தந்த கிராமத்திலுள்ள பொருத்தமான பதிவு செய்யப்பட்ட ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு சபை அனுமதி பெற தவிசாளரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தர்க்கரீதியான மற்றும் சட்ட ரீதியிலான பல்வேறு விடயங்களை முன்வைத்து பலத்த ஆட்சேபனைகளை முன்வைத்து கருத்துக்களை முன்வைத்ததுடன் ஏனைய உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 03 வாக்குகள் பிரேரணைக்கு எதிராகவும், 06 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் அளிக்கப்பட்டது. இதனூடாக 03 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை வெற்றிபெற்றது. பிரேரணைக்கு எதிராக வை. கோபிகாந்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனைத்தொடர்ந்து இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஏ. பர்ஹான், காரைதீவு பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களாக கடலரிப்பு அணைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு அணை நிர்மாண பணிக்காக ஒதுக்கப்பட்ட பாறாங்கற்களை இடப்பற்றாக்குறை காரணமாக காரைதீவு பிரதேசத்தில் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டு வேலைத்திட்டம் சீராக முன்னெடுக்கப்பட்டது. அதனை சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களுக்கு அநீதி நடப்பதாகவும், தமிழ் மக்களின் உடமைகள் காவுகொள்ளப்படுவதாகவும் இனவாத, மதவாத, பிரதேசவாத கருத்துக்களை காரைதீவு தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கும் பொறுப்பு இந்த உயரிய சபைக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த அமர்வின் போது தவிசாளரின் கோரிக்கைக்கு அமைய ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு அமைய ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கும், அவருடன் இணைந்து காலமான அவரது உறவினர்கள், அமெரிக்க- இஸ்ரேலிய தாக்குதலில் காலமான குழந்தைகள், பொதுமக்களுக்கும் மௌன அஞ்சலி (பிரார்த்தனை) செலுத்தப்பட்டது.

மேலும் பல பல்வேறு விடயங்களை ஆராய்ந்த சபை முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

 


பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மனித மேம்பாட்டிற்கான பங்கேற்பு வழிகளை ஊக்குவித்தல்   எனும் சிறுமானிய திட்டத்தின் கீழ், சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பினால் (SCBOC) இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று திங்கட்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களிடம் குறித்த தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அகமட் சபீர் மற்றும் சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 
பொதுமக்களுக்கு அரச சேவைகள் தொடர்பான விபரங்களைத் திறம்படவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு, பொதுவான தளத்திற்கான தேடல் (Search for Common Ground) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகிய அமைப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 (  வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு  நேற்று  சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​"சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் - கட்டம் 2" (Responsible Digital Society for Social Cohesion- Phase 2) எனும் செயற்திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​சர்வோதயம் அமைப்பு,  யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. 

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மூத்த மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின்  ஒருங்கிணைப்புப் பணிகளை நுஜா ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது.

​இச்செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, செயலமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

செயலமர்வின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட ரவீந்திரன் விதுர்சன், நவீன டிஜிட்டல் உலகில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.

அத்தோடு,பல்லின சமூகங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில், இனங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் பொறுப்புள்ள செய்தி அறிக்கையிடலை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.

இங்கு. அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரும், சட்டத்தரணியுமான நஹீஜா முசாபிர் உரையாற்றுகையில்,

தற்கால டிஜிட்டல் யுகத்தில் போலிச் செய்திகளும், வெறுப்புப் பேச்சுகளும் மிக வேகமாகப் பரவி, சமூக ஒற்றுமையைக் குலைக்கும் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், செய்திகளை வெளியிடும் போது ஊடகவியலாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டும் செயற்பட வேண்டும்.

​வெறுப்புப் பேச்சுக்கு எதிரான கூட்டுச் செயற்பாடு
​சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளை (Hate speech) இனங்கண்டு, அவற்றை முறியடிப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு இன்றியமையாததாகும். 

சமூகத்தில் பதற்ற நிலையைத் தணித்து, அமைதியை நிலைநாட்டக்கூடிய நடுநிலையான ஊடகவியலின் அவசியத்தையும் அவர் தனது உரையில் விவரித்தார்.

 

பாறுக் ஷிஹான்

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட   குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக  அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி -புத்தங்கல  எல்லைப்பகுதியில் இன்று (1) அதிகாலை  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்டு மரம் ஒன்றில் பரண் அமைத்து யானை காவலில் ஈடுபட்ட குடும்பஸ்தரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளானார்.

இவ்வாறு காயமடைந்த நிலையில்  மீட்கப்பட்டவர் 42 வயது மதிக்கத்தகக் சுப்ரமணியம் கோவீந்தன் என அடையளாம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி காயமடைந்த குடும்பஸ்தர் யானை காவலுக்காக சென்ற நிலையில் இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுத்தள்ளார் என  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

 நூருல் ஹுதா உமர்


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தனது 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளது. அந்த வகையில் கல்லூரியின் புதிய ஒன்பது மாடி கல்வி, விளையாட்டு மற்றும் புதுமை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

1884ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

மாணவர்களை உலகத் தரத்திற்கு ஏற்ப உருவாக்கும் நோக்கில் இந்த ஒன்பது மாடி வளாகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 102 பர்சஸ் பரப்பளவுடைய காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில் ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் வசதிகள், நவீன விஞ்ஞான ஆய்வு கூடங்கள், டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி மையங்கள், 500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், கேட்போர் கூடம் மற்றும் பல்நோக்கு அரங்குகள், உட்புற விளையாட்டு அரங்கு, நீச்சல் தடாகம், புட்சால் மைதானம், கராத்தே, குத்துச்சண்டை, சதுரங்கம் மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான நவீன பயிற்சி வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன.

இக்கட்டிடம் சுற்றுச்சூழல் நட்பு அம்சங்களுடன் கூடிய பசுமை வளாகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, கழிவு முகாமைத்துவம், இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தின் அதிகபட்ச பயன்பாடு போன்ற அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

இம்முயற்சிக்கு பிரதான நன்கொடையாளராக மறைந்த எம்.எச். ஒமர் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது ஆதரவுடன், 2017ஆம் ஆண்டு 80 பர்சஸ் நிலப்பரப்பு பாடசாலைக்காக வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டமை இன்றைய வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “LIGHT FOR LIFE” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கட்டிடத் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அதேவேளை, இலங்கைக்கான காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி அவர்கள் சிறப்பு அதிதியாக பங்கேற்கவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை உயரதிகாரிகள், நன்கொடையாளர்கள், சமூகப் பிரமுகர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான HPV (Human Papillomavirus) மற்றும் ADT (Adult Diphtheria Tetanus) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். எதிர்கால தலைமுறையினரை தொற்றுநோய்கள் மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் இத்தகைய தடுப்பூசி வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

ADT தடுப்பூசி டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் முக்கிய தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக காயங்கள் மற்றும் தொற்றுகளால் ஏற்படக்கூடிய டெட்டனஸ் நோயிலிருந்து பாதுகாப்பதோடு, தொண்டை மற்றும் சுவாசப்பாதையை பாதிக்கும் டிப்தீரியா தொற்றையும் தடுக்கும் என மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, HPV தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும், HPV வைரஸ் காரணமாக ஏற்படும் சில புற்றுநோய்கள் மற்றும் தொடர்புடைய நோய்களின் அபாயத்தை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இளம் வயதிலேயே தடுப்பூசி வழங்கப்படுவதன் மூலம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும் சுகாதாரத் துறையினர் விளக்கமளித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் சமூகத்தில் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுச் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கிவரும் 29 ஆரோக்கிய வாழ்வு மையங்களின் (Healthy Lifestyle Centers) சேவைகளை மேம்படுத்தி, அவற்றின் தரத்தை உயர்த்தும் நோக்கில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் ஒருங்கிணைத்திருந்தார்.

இச்செயலமர்வில் ஆரோக்கிய வாழ்வு மையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதன்போது ஆரோக்கிய வாழ்வு மையங்களின் செயல்திறனை மேலும் உயர்த்துவது, பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது, சுகாதார சேவைகளின் அணுகலை விரிவுபடுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் மற்றும் சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய வாழ்வு மையங்களின் சேவைகளை மக்கள் மத்தியில் மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி நடராஜா கதீஷன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்தார்.


கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும்  கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ்  மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் ஜி. ஷாஹிர் அஹமட் PMJF/PMAF  பிரதம அதிதியாகவும் பதவியேற்பு அதிகாரியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


நிகழ்வின் போது 2025/2026 ஆண்டுக்கான தலைவராகப் பணியாற்றிய லயன் ஏஎல்எம்
 பாயிஸ் MAF அவர்களிடமிருந்து, 2026/2027 ஆண்டுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் பொறியியலாளர் என். கதீஷன்  பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

“Service Beyond the Limit” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த விழாவில்,  புதிய தலைவரின் அறிமுகத்தை  கழக நிர்வாகியும், உபதலைவருமான லயன் எந்திரி.எம்.சுதர்சன் நிகழ்த்தினார்.

புதிய செயலாளராக லயன் சட்டத்தரணி அருள்.நிதான்சன்,  பொருளாளராக லயன் ஏ.கிஷோக் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)

சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள், மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் சாசனத் தலைவர் லயன் என். புஷ்பஹரன் MJF/MAF மற்றும் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் எம். சுதாகரன் MJF/MAF ஆகியோரால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டன.

இவ்வாறான பெறுமதிமிக்க அன்பளிப்பின் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வன்பளிப்பை வழங்குவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் வைத்தியசாலையின் சார்பிலும், பணிப்பாளர் அவர்களினாலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.