Ashes 2019 ;இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்




2019 ஐசிசி உலகக்கோப்பை இறுதியாட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.
ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்தது. பட்லர் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்சல் மார்ஷ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் பெரிதும் நிலைகுலைந்தது. ஆர்ச்சர் 6 விக்கெட்டுகள் எடுக்க, ஆஸ்திரேலியா 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 329 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் என்ற இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலியா 263 ரன்கள் மட்டுமே எடுக்க, 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியாக பர்மிங்காமில் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று தொடங்கியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்படத்தின் காப்புரிமைPA MEDIA
கடந்த ஜூலை மாதத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று முதல்முறையாக சாம்பியன் ஆன இங்கிலாந்து, ஆஷஸ் தொடரை கைப்பற்றிட வேண்டும் என்ற உற்சாகத்தில் விளையாட தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை 122 ரன்கள் மட்டும் எடுத்தநிலையில் மிகவும் தடுமாறியது.
ஓராண்டாக சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஸ்மித் எடுத்த அபார சதம் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது அந்த போட்டியை ஆஸ்திரேலியா வெல்ல காரணமாக இருந்தது.
அதன் பின்னர் இரண்டாவது போட்டி சமநிலை போட்டி 3-வது போட்டியில் உலகக்கோப்பை கதாநாயகன் பென் ஸ்டோக்ஸ் தோல்வியில் இருந்து இங்கிலாந்தை மீட்டு வெற்றி பெற செய்தார்.
நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்தும் வெல்ல உலகக்கோப்பை இறுதியாட்டம் போலவே ஆஷஸ் தொடரும் சமநிலை முடிந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது எனலாம்.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்ன?

சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்மித்

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்றது என்பதைவிட இங்கிலாந்துக்கும் ஸ்டீவன் ஸ்மித்துக்கும்தான் நடந்தது எனலாம். அந்தளவு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக ஸ்மித் விளங்கினார்.
5 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்கள் எடுத்த ஸ்மித் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதத்தில் மீண்டும் இடம்பிடித்தார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்படத்தின் காப்புரிமைGARETH COPLEY/GETTY IMAGES
மிகுந்த அழுத்தம் மற்றும் ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடதது, உலகக்கோப்பையை வென்று தன்னம்பிக்கையுடன் இருந்த இங்கிலாந்து என பல கடினமான சூழல்களையும் தாண்டி ஸ்மித் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக பங்களித்தது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் கம்மின்ஸ்தான். மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகிய இருவரும் பல போட்டிகளில் விளையாடாத நிலையில், தனது அணியின் பந்துவீச்சை முழுவதுமாக சுமந்தது கம்மின்ஸ்தான்.
5 டெஸ்ட்களிலும் விளையாடிய கம்மின்ஸ் மிக அபாரமாக பந்துவீசி 29 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லீட்ஸ் போட்டியில் நிச்சயமாக ஆஸ்திரேலியா வென்றுவிடும் என்ற சூழலில் பென் ஸ்டோக்ஸ் விளையாடியது மறக்கமுடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்.
ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்படத்தின் காப்புரிமைGARETH COPLEY/GETTY IMAGES
லீட்ஸ் டெஸ்ட் போட்டியில், ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெல்ல காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸின் இன்னிங்க்ஸ் குறித்து பல கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என பல முன்னாள் வீரர்கள் பென் ஸ்டோக்ஸுக்கு புகழாரம் சூட்டினார்கள்.
பர்ன்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி தலா 300 ரன்களுக்கு மேல் இந்த தொடரில் குவித்தனர். இங்கிலாந்து பேட்டிங்கில் இவர்கள் இருவரும் பல போட்டிகளில் நன்றாக விளையாடினர்.
இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாத சூழலில், பிராட் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரும் இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசினர். இருவரும் முறையே 23 மற்றும் 22 விக்கெட்டுகளை எடுத்தது இங்கிலாந்து அணிக்கு பெரிதும் உதவியது
அதேவேளையில் லீட்ஸ் போட்டியில் இங்கிலாந்தை 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸை கட்டுப்படுத்தமுடியாமலே தடுமாறியது அந்த அணியின் மிகப்பெரிய சறுக்கல்.
மேலும் ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகிய இருவரும் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது, ஸ்மித்துக்கு பக்கபலமாக மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடாதது போன்றவையே ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லாததற்கு காரணங்கள்.
தொடர் துவங்கும் முன் இந்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி நிச்சயமாக வென்றுவிடும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி, மிகவும் போராடிய இங்கிலாந்து இந்த தொடரை சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்படத்தின் காப்புரிமைGARETH COPLEY/GETTY IMAGES)
இதற்கு முக்கிய காரணம் முதல் போட்டியிலேயே தனது பிரதான பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து இழந்தது. இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசும் ஆண்டர்சன் முதல் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய நிலையால் உடல்தகுதியின் காரணமாக தொடரில் விளையாட முடியாமல் போனது.
ஸ்மித்தை கட்டப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறியபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாதது நன்கு உணரப்பட்டது.
இங்கிலாந்து சுழல்பந்துவீச்சாளர்கள் யாரும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது மற்றும் உலகக்கோப்பையில் அசத்திய தொடக்க இணையான ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் சோபிக்காதது ஆகியவையும் இங்கிலாந்து தொடரை வெல்ல முடியாமல் போனதற்கு காரணங்கள்.
உலகக்கோப்பை இறுதியாட்டம் போலவே சமனில் முடிந்த ஆஷஸ் தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், இந்த தொடரின் இறுதியில் ஸ்மித், ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் ஆகியோர் தங்கள் அணிகளுக்கு சிறப்பாக பங்களித்து தொடரை சமன் செய்ய காரணமாக அமைந்தனர்.