தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் கைது


பாறுக் ஷிஹான்

கல்முனைகுடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

செவ்வாய்க்கிழமை (17) இரவு இரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் ரவூப் பொலிஸ் கன்ஸ்டபிள்களான நவாஸ்(43404)கீர்த்தனன்( 6873)கவிதன்(92876) ஆகியோர்  கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் பதுங்கி இருந்து அவ்வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை மடக்கி பிடித்தனர்.

இதன் போது குறித்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞனிடம் இருந்து கஞ்சாவினை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் அவ்விடத்தில்  விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அப்பகுதி வீடு ஒன்றினை முற்றுகை இடுவதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எல்.ஏ சூரிய பண்டாரவின் ஆலோசனைக்கமைய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் செயற்பட்ட பொலிஸ் குழு  சந்தேகத்திற்கு இடமான வீட்டை சுற்று வளைத்து உள்நுழைந்தது.

இவ்வாறு உள்நுழைந்த பொலிஸார் தராசு ஒன்றில் கேரளா கஞ்சாவினை அளவீடு செய்த இரு பெண்களை அவ்வீட்டில் இருந்து கைது செய்ததுடன் 7 கிலோ கஞ்சாவினையும் மீட்டது.

இவ்வாறு  கைதான மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு புதன் கிழமை(18) கல்முனை  நீதிவானின் உத்தரவிற்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.