சிறிசேனவிற்கு வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் குறித்த கடிதம் அளிக்கப்பட்டதா?



இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
இலங்கை புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த கடிதத்தின் பிரகாரம், வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் தொடர்பிலான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
அத்துடன், குறித்த வேட்பாளர்கள் மாவட்ட ரீதியில் எவ்வாறு முன்னிலை வகிக்கின்றார்கள் என்பது தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த கடிதம் கடந்த ஐந்தாம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் தலைமையகத்தின் பதில்

புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக உண்மைக்கு புறம்பானவை என போலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
போலீஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர், குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில் தேர்தல் நடவடிக்கைகளிலோ அல்லது தேர்தல் கருத்து கணிப்புகளிலோ ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியானதுமாக அமைதியுடன் நடத்துவதே ஸ்ரீலங்கா போலீஸின் முழுமையான பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான போலி தகவல்கள் அடங்கிய கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நபர் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.