ஹட்டனில் நீர் வெட்டு




அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் நீர் விநியோகம் இரண்டு தினங்களுக்கு தடை செய்யப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஹட்டன் பெதி வீதியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த நீர் குழாய்க்கு பதிலாக புதிய நீர் குழாய் ஒன்றினை பொருத்தும் நடவடிக்கை இன்று (06) பிற்பகல் 6 மணி தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கையிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி பிற்பகல் 3 மணி தொடக்கம் 09 ஆம் திகதி நள்ளிரவு வரை ஹட்டன் பெதி வீதி, சமனலகம, சுற்றுவட்ட வீதி, ஹட்டன் சந்தை மேல் பிரிவிற்கும் 09 ஆம் திகதி அதிகாலை 01 மணி தொடக்கம் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை பொன்னகர், கெம்ப்வெலி, வில்பட்புர, சாலியபுர, டிக்கோயா, அலுத்கல்ல, மல்லியப்பு, திம்புல ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஹட்டன் நகரின் சில இடங்களில் குறித்த காலப்பகுதியில் திடீர் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படக்கூடும் எனவும் நீர்வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் வழங்கல் சபையின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக ஹட்டன் நகரின் பெதி வீதி குறித்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்துக்காக முழுமையாக மூடப்படவுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் சடென் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.