ஹைதராபாத் என்கவுன்டர்.கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா?




ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவேறுபட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் பலர் இதில் ஈடுபட்ட காவலர்களை `கதாநாயகர்கள்` என்றும், `நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது` என்றும் கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டரில் இது குறித்த பல ஹாஷ்டேகுகளும் டிரண்டிங்கில் உள்ளன. மேலும் இதுபோன்ற பாலியல் வல்லுறவு வழக்குகளில் இதுதான் தீர்ப்பு என்பதுபோலும் சமூக வலைதளங்களில் பலர் பேசி வருகின்றனர்.
சிலர் தமிழ்நாட்டில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும் இதில் குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கியும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகளும், பட்டாசு வெடிப்பது போன்ற காட்சிகளையும் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் இது கொண்டாட வேண்டிய விஷயமில்லை என்கிறார்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.
ஹைதராபாத் என்கவுண்டர் தொடர்பாக சமூக ஊடகங்களில் வாதம்

`நீதியை நிலைநாட்ட முடியாது`

"நான்கு பெரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் நீதியா? நீதிமன்றத்தை மூடிவிட்டு இதுபோன்ற என்கவுண்டர்களை பார்க்க வேண்டுமா? உன்னாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர் மீது தீ வைக்கப்படுகிறது. அவரை போன்ற எண்ணற்றவர்களின் குடும்பத்தினர் நீதிக்காக போராடி வருகின்றனர். என்கவுன்டர்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியரான கல்பனா.

`பின்நோக்கி செல்லும் செயல்`

இந்த என்கவுண்டர் குறித்து தமிழகத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இம்மாதிரியான என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது. டெல்லி வழக்கில் நாம் கோவத்துடன் செயல்பட்டு சட்டத்தின்மூலம் நீதி பெற்றோம். ஆனால் தற்போது என்கவுன்டர் செய்தது மூலம் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம்" என்று அவர் கூறினார்.
"ஊடகங்கள் அனைத்தும் சட்டத்துக்கு ஆதரவாகதான் பேசவேண்டும். அவர்கள் என்கவுண்டருக்கு ஆதரவாக பேச கூடாது. நீதி என்பது சட்டத்தை பொறுத்தே நமக்கு கிடைக்க வேண்டும். என்கவுன்டர் இம்மாதிரியான குற்றங்களுக்கு நிச்சயமாக ஒரு தீர்வாக இருக்காது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

’இது கொலை’

"என்கவுன்டர் என்பது கொலையே அது நீதியல்ல. போலீஸ் காவலில் இருந்தவர்கள், அதுவும் ஆயுதமின்றி இருந்தவர்கள் எவ்வாறு காவலர்களை தாக்க முடியும்?," என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞரும், ஆர்வலருமான சுதா ராமலிங்கம்.