கயிலகொட பகுதியில் பெண் ஒருவர் கொலை

(க.கிஷாந்தன்)
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை கயிலகொட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் 28.01.2020 அன்று நுழைந்த சிலர் வீட்டிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்துக் கொண்டு இளைஞர்கள் குறித்த வீட்டிலிருந்து ஓடி வருவதை அயல் வீட்டில் இருந்த பெண் ஒருவர் பார்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அங்கப்பன் கெளரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஆலயத்திற்குச் சென்று வீடு வந்தவுடன் மூன்று இளைஞர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து மேற்படி கொலையை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று இளைஞர்களும் வீட்டிற்குள் புகுந்து அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுக்க முனைந்தபோது இளைஞர்களுக்கும் அப்பெண்ணுக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.
அத்துடன் பெண் கூக்குரல் இடத்தொடங்கியதும் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள், பெண்ணின் கழுத்தை வெட்டியதுடன், நெஞ்சிலும் கத்தியினால் குத்தியுள்ளனர். அத்துடன்  நகைகளை அபகரித்துக்கொண்டு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் குறித்த பெண் மற்றும் தனியாக இருந்துள்ளதாகவும், பெண்ணின் கணவர் தனது வர்த்தக நிலையத்திற்கு சென்றதாகவும், மகன் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இழக்கான குறித்த பெண் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Advertisement