’ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம் எங்களுடையதுதான்’

கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் திங்களன்று விபத்துக்குள்ளான விமானம், தங்களுக்குச் சொந்தமானதுதான் என அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் தங்கள் எதிரிகளால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பதற்கு எந்த தடயமும் இல்லை என அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் சன்னி லெகெட் கூறியுள்ளார்.
தாலிபன் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் கஸ்னி மாகாணத்தில் டே யாக் மாவட்டத்தில் திங்களன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இன்னொரு விமானமும் விபத்துக்குள்ளானது என தாலிபன் அமைப்பு கூறியதை அவர் மறுத்துள்ளார்.
தாலிபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தது. அந்தக் காணொளியில் அமெரிக்க விமானப்படையின் சின்னத்தைக் கொண்ட விமானம் ஒன்று எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது பதிவாகியிருந்தது.
விபத்துக்குள்ளான விமானம் என்று கூறி இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்துப் பார்க்கும்போது, இது பாம்பார்டியர் இ-11ஏ (Bombardier E-11A) ஜெட் ரக விமானம் என்றும், இதை ஆப்கானிஸ்தானில் உளவுப் பணியை மேற்கொள்வதற்காக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான காரணங்களால் அரசுக்கு சொந்தமான, அரியானா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் தீப்பிடித்து, நொறுங்கி விழுந்ததாக ஆஃப்கன் அதிகாரிகள் முதலில் கூறியிருந்தனர்.
இந்த பயணிகள் விமானம் அரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது என்று தொடக்கத்தில் கூறப்பட்டதை அந்த நிறுவனமும் மறுத்துள்ளது.

’மிகவும் அரிதானது’

ஆப்கானிஸ்தானின் அந்த பகுதியில் ஹெலிகாப்டர் பறப்பதே சிக்கலாகவும் விபத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கருதப்படும்போது இது போன்ற நிலையான இறக்கைகள் பொறுத்தப்பட்ட விமானம் பறப்பது மிகவும் அரிதானது என பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்கஸ் கூறுகிறார்.
ஆனால் தாலிபன்கள் உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டுவீழ்த்தும் திறனுடைய ஆயுதம் வைத்திருப்பார்கள் என நம்பமுடியவில்லை என்கிறார் அவர்.
விபத்துகுள்ளான பாம்பார்டியர் இ-11ஏ ரக விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் நான்கு மட்டுமே இருந்தன. அந்த நான்கில் ஒன்றுதான் இந்த விமானம்.
map
அந்த பகுதியில் அதிக உயரத்தில் பறப்பதற்காகவே, அந்த பாம்பர்டியர் ரக விமானத்தத் தேர்வு செய்திருக்க வேண்டும். அந்த விமானம் முழுவதும் மின் சாதனங்கள் இருந்தன.
இவை மேலே விமானத்தில் இருப்பவர்களுக்கும் கீழே இருக்கும் படையினருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுவை ஆகும். அல்லது சிக்கலுக்கு உள்ளான பகுதியில் இருந்து தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுபவை ஆகும்.
இது சரியாக சிக்னல் கிடைக்காத இடத்தில் பொருதப்படும் wi-fi போன்றது என்கிறார் ஜொனாதன் மார்கஸ்.
இது போன்ற மின் கருவிகள் கொண்ட ஆளில்லாத விமானங்கள்தான் ஆப்கானிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியுள்ளன.
ஏனென்றால், மலைப்பாங்கான பகுதிகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய பிரச்சனையாக உள்ளன.


Advertisement