பாடசாலை அதிபர், ஆசிரியர்களை உடன் இடமாற்றக் கோரி

(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 
 கவரவில தமிழ் மகா வித்யாலயாவின் தற்போதைய அதிபரையும், பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள், மாணவர்கள் 30.01.2020 அன்று திகதி காலை 9.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் தற்போதைய அதிபர் பல மாதங்களாக ஆசிரியருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், ஆசிரியரை வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் 29ஆம் திகதியன்று விஷம் குடித்துள்ளார். இந்த நிலைமை பாடசாலையிலும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய நிலைமை குறித்து கல்வி அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்துள்ள போதிலும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் இப்பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஊடகங்களுடன் பேசிய கவரவில தமிழ் மகா வித்யாலய மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் இடையே நீண்ட காலமாக எழுந்துள்ள பல பிரச்சினைகளால் எமது கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் எமது பெற்றோர் பல இன்னல்களுக்கு மத்தியில் நமது கல்வி நடவடிக்கைக்காக எம்மை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

ஆனால் இங்கு அதிபர் மற்றும் ஆசியர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளால் பாடசாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன் எமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் விஷமருந்துவதால் அதனை அவதானிக்கும் மாணவர்களும் ஏதேனும் பிரச்சனைக்கு விஷமருந்த முயற்சிக்க கூடும் ஆகவே இவ்வாறான ஆசிரியர்கள் எமக்கு வேண்டாம் என்றும் புதிய நிர்வாகம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த பாடசாலையில் 37 ஆசிரியர்களும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Advertisement