'இலங்கை மக்கள் முகமூடி அணியத் தேவையில்லை'

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
"நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனந்த விஜேவிக்ரம
Image captionஆனந்த விஜேவிக்ரம
இதேவேளை முகமூடிகளை அணியுமாறு அரசாங்கம் மக்களை அறிவுறுத்தவில்லை என்று, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, முகம் மூடிகளை அதிக விலைக்கு சில வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் இலங்கையில் பரவியுள்ள நிலையில், கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் முகமூடிகளை கணிசமானோர் அணியத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக நகரப் பகுதிகளில் முகமூடிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் அவை அதிக விலைகளில் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து முகமூடிகளுக்கான நிர்ணய விலைகளை தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு தடவை மற்றும் பயன்படுத்தக் கூடிய முகமூடி (Disposable face mask) ஒன்றின் விலை 15 ரூபாய் என்றும், N95 ரக முகமூடி ஒன்றுக்கான விலை 150 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக வழங்க கோரிக்கை

மறுபுறமாக, முகமூடிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ
இந்த நிலையில், அமைச்சர் பந்துல குணவர்த்தனவை தொடர்புகொண்ட பிபிசி தமிழ் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் - முகமூடிகளை அணிகின்றமையைச் சுட்டிக்காட்டியதோடு, கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவை எனவும் வினவியது.
அதற்கு அவர் பதிலளிக்கையில்,"இலங்கை நாட்டவர் எவரும் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை என்பதால், இல்லாத ஒன்றைக் கூறி, மக்களை நாம் அச்சப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
அமைச்சர் பந்துல குணவர்த்தன
Image captionஅமைச்சர் பந்துல குணவர்த்தன
மேலும்,"முகமூடி அணிய வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இலங்கையர் எவரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்படவில்லை" என்று தெரிவித்த அவர் "டெங்கு வைரஸ் தாக்கத்தால் பாடாசாலை மாணவர் ஒருவர் இறந்தபோது, நாம் பாடாசாலையே மூடவில்லைதானே," எனவும் கூறினார்.


Advertisement