#அமெரிக்காவில் கலகம், ஊரடங்கு அமுலில்


அமெரிக்காவின் 25 நகரங்களில் ஊரடங்கு தற்சமயம் அமுலில் உள்ளது. ஆர்பாட்டக்காரர் களைக் கட்டுப்படுத்த 5000 இராணு வீர்கள் அனுப்பட்டுள்ளனர். 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெரிக்காவின் மின்னெசொடா மாநிலத்தைச் சேர்ந்த மின்னியபொலிஸ் நகரில்,
கடந்த திங்கள் கிழமை (25.05.2020) கருப்பின வாலிபர் ஒருவரின் கழுத்தை அழுத்திக் கொன்றது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்நகரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் உச்சமாக கடந்த வியாழனன்று (28.05.2020) இரவு போலீசு நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

அமெரிக்க சமூக வலைத்தளங்களில் கடந்த திங்கள்கிழமை ஒரு காணொளி மிகவும் வைரலாகப் பரவத் தொடங்கியது. அந்தக் காணொளியில் ஒரு கருப்பின வாலிபரைத் தரையில் படுக்க வைத்து அவரது கழுத்தில் போலீசு தனது முட்டியை வைத்து அழுத்துகிறது. அந்த வாலிபரோ, “ என்னால் மூச்சு விடமுடியவில்லை. குடிப்பதற்கு தயவு செய்து தண்ணீர் அல்லது ஏதேனும் தாருங்கள். எனது வயிறு, கழுத்து மற்றும் உடலெல்லாம் வலி எடுக்கிறது.” என்று அந்த கருப்பின வாலிபர் மூச்சுத் திணற பேசும் காட்சியும் பதிவாகியிருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட்

இந்தக் காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போலீசால் கழுத்து நெறிக்கப்பட்ட நபரின் பெயர் ஃபளாய்ட். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், போலீசின் இந்த இனவெறித் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருகின்றனர்.

ஃப்ளாய்டை பட்டப்பகலில் இனவெறிப் படுகொலை செய்த போலீசின் பெயர் சௌவின். சௌவின்-ஐயும் அவரது கூட்டாளிகளான 4 போலீசையும் கைது செய்யக் கோரி, மின்னாபோலிஸ் நகரின் வீதிகளில் கடந்த நான்கு நாட்களாக மக்கள் குவிந்து போராடத் துவங்கியுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. எரிக் கார்னர் என்பவரின் கழுத்தை நெறித்துக் கொன்றது நியூயார்க் போலீசு. “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என கார்னரும் அந்தப் போலீசிடம் கெஞ்சினார். ஈவிரக்கமற்ற முறையில் கார்னரைப் படுகொலை செய்தது நியூயார்க் போலீசு. ”கொல்லப்படும் போது எரிக் கார்னருக்கு இருந்த வயதுதான் தற்போது கொல்லப்பட்டிருக்கும் ஃப்ளாய்டுக்கும் இருக்கும். இது, எனது மகன் மறுபடியும் கொல்லப்பட்டதற்கு இணையானது” என்கிறார் எரிக் கார்னரின் தாய் க்வென் கர்.

46 வயதான ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் வீதியில் போராடத் தொடங்கிய பின்னர்தான் அமெரிக்க அரசியல்வாதிகள் வாயைத் திறக்க ஆரம்பித்தனர். அதுவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர, தவறு செய்த அதிகாரியைக் கைது செய்யக் கோரவில்லை.

ஃப்ளாய்டின் கழுத்தில் கால்முட்டியை வைத்து போலீசு அழுத்திக் கொண்டிருப்பது காணொளியில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரத் திமிரும், இனவெறியும் ஒருங்கே சேர்ந்த மிருகமாய் ஃப்ளாய்டின் கழுத்தை அழுத்தும் அந்த அதிகாரிக்கான தண்டனை பணி நீக்கம் மட்டும்தான். அவன் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவையெல்லாம் மக்களின் ஆத்திரத்தை அதிகரித்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கான மின்னியாபோலிஸ் மக்கள். “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற ஃப்ளாய்டின் வாசகத்தை அட்டைகளில் ஏந்தி வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.

ஃப்ளாய்டைப் படுகொலை செய்த போலீசு அதிகாரி சௌவின், தனது 19 ஆண்டுகால போலீசுப் பணியில் இதற்கு முன்னர் மூன்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் என்பதோடு இவர் மீது இதுவரையில் 17 புகார்கள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட குற்ற வரலாறு கொண்ட போலீசு அதிகாரிக் சௌவினின் வீட்டிற்கு ஆயுதமேந்திய போலீசு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சௌவினின் மீது கொலைவழக்குப் பதிவு செய்யும்படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில்., புதன் கிழமை இரவு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசு நிலையத்திற்கு முன்னர் நடந்த இந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த தடுப்பரண்களுடன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்ணீர்ப்புகை குண்டை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களும் கற்களையும், தம் மீது விழுந்த கண்ணீர்ப்புகை குண்டுகளையும் போலீசு நிலையத்தின் மீது திருப்பி வீசித் தாக்கினர். புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் பல்வேறு கட்டிடங்களும் கடைகளும் சூறையாடப்பட்டன.

வியாழன் அன்று இரவு மக்களின் மீது ரப்பர் குண்டுகளை சுட்டு போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது போலீசு. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்களும் திருப்பி அடித்தனர், ஒரு கட்டத்தில் மக்கள் ஆத்திரமடைந்து போலீசு நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்கு தீவைத்துக் கொழுத்தினர். இதனால் பீதியுற்ற போலீசு, உடனடியாக போலீசு நிலையத்திலிருந்து வெளியேறி தப்பிச் சென்றது. அதன் பின்னர் போலீசு நிலையத்திற்கும் தீ வைத்தனர் மக்கள்.

ஃப்ளாய்ட் மரணம் குறித்து வாய் திறக்காத டிரம்ப், இந்த தீவைப்பு சம்பவத்திற்குப் பிறகு திருவாய் மலர்ந்துள்ளார். ”இந்த பொறுக்கிகள் ஜார்ஜ் ஃப்ளாய்டின் நினைவை அவம்ரியாதை செய்துள்ளனர். அவ்வாறு நடப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். அம்மாநில கவர்னர் டிம் வால்ஸ்-இடம் இராணுவம் அவருக்குத் துணையாக எப்போதும் இருக்கும் என்று கூறினேன். ஏதேனும் சிரமம் இருந்தால், நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். கொள்ளை துவங்கும்போது, துப்பாக்கிச் சூடு துவங்கும். நன்றி !” என்று தனது டிவிட்டரில் மிரட்டல் விட்டுள்ளார். வலதுசாரி ட்ரம்பிடம் இதை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.


ஆறாண்டுகளுக்கு முன்னர், ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. கருப்பினத்தவருக்கும், வெள்ளையினத்தவர்களுக்குமான நீதியில் பாரபட்சம் கூடாது என்பதுதான் அவர்களது அதிகபட்சக் கோரிக்கையே. அவர்களது கோரிக்கைகளுக்கு இன்றுவரை செவிசாய்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இன்று நடக்கும் தீவைப்பு, சூறையாடல், கலவரம் ஆகியவற்றிற்கான காரணத்தை இப்போராட்டத்தில் காணப்பட்ட பதாகைகள் சுட்டிக்காட்டின.


“கலகம் என்பது செவிசாய்க்கப்படாதவர்களின் மொழி” – மார்ட்டின் லூதர் கிங்.