பசறை நகர மத்தியில்,விபத்து

(க.கிஷாந்தன்)

 

பசறை நகர மத்தியில் லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 முச்சக்கர வண்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் பசறை அம்பேதன்னகம பகுதியில் வசிக்கும் குருலு குமார என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த குறித்த லொறி நேற்றிரவு பசறை நகரில் தரித்திருந்து இன்று காலை புறப்பட தயாராகியுள்ளது.

 

இதன்போது லொறியின் எஞ்சின் இயங்க மறுத்தமையால் லொறியை சிலர் தள்ளி இயங்க செய்ய முயற்சித்துள்ளனர்.

 

சுமார் 600 மீற்றர் வரை லொறி தள்ளப்பட்ட நிலையில் திடிரென நகர மத்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

அந்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த ஒருவர் மீது லொறி சாய்ந்துள்ளதுடன் அவர் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

 

மேலும் விபத்தில் 4 முச்சக்கர வண்டிகளும் லொறிக்குள் அகப்பட்டு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் லொறியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பசறை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement