பாடசாலைகளில் மருத்துவ அறை


பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மருத்துவ சிகிச்சைகளை அளிக்கக்கூடிய வகையிலான அறையொன்றை தயார்படுத்திக் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் மாணவர்கள் திடீர் சுகயீனமடையும் சந்தர்ப்பங்களில் அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லும் வரை தங்க வைப்பதற்காக விசேட அறையொன்றை தயார்ப்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கலவன் பாடசாலைகளில், மாணவர்களுக்கு புறம்பாகவும், மாணவிகளுக்கு புறம்பாகவும் வெவ்வேறு அறைகளை தயார்ப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறையில் போதியளவு வெளிச்சம் மற்றும் காற்று செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், கைகளை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டில், சுத்தமான குடிநீர், முதலுதவி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஏனையோரிடமிருந்து இடைவெளியே பேணும் வகையிலான அறையாகவும் அது அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அந்த அறையுடன் இணைந்ததான மலசலகூட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்ச வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் இந்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் ஒரு கட்டிலும், 50 முதல் 500 மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் 2 கட்டில்களும், 501ற்கு அதிக மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் குறைந்தது 3 கட்டில்களை கொண்டதாக இந்த மருத்துவ அறைகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவ அறையில் நோயாளர் ஒருவர் தங்கியிருந்து வெளியேறியுடன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாளாந்தம் இரண்டு தடவைகள் இந்த அறையை சுத்தப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கிருமிகளை முழுமையாக இல்லாது செய்யும் வகையில் அவை சுத்திகரிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அடையாளம் காணப்படும் நோயாளர் ஒருவர் குறித்த அறையில் இருப்பாராயின், உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் பொறுப்பாளரோ அல்லது சுகாதார அதிகாரிகளோ உள்ளே செல்வது கட்டாயமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.