#SpaceX சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது


#NASA #SpaceX #Astronauts #ElonMusk

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ராக்கெட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று விண்வெளிக்கு கிளம்பினர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

கசிவு, அழுத்தம் மற்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு பிறகு, இந்த விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் பயணித்த டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் வரவேற்றனர்.

CEO Elon Musk's SpaceX company is the first to offer a commercial crew transport serviceபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று கிளம்பிய பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.