சிவப்பு எச்சரிக்கை கடிதம்

வி.சுகிர்தகுமார் 
 

  ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்  தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று 300இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின் போதே குறித்த இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் மக்கள் டெங்கு பரவுகின்ற வகையில் சூழலை வைத்திருக்காதவாறு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் டெங்கு நோய் பரவுதலை தடுப்பதற்காக சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இன்று விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் பணிப்புரைக்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் அறிவுறுத்தலுக்கமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நடவடிக்கையில் வைத்திய அதிகாரி திருமதி அகிலன்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்திற்குட்பட்ட  மேற்பார்வை பொதுச்சுகாதார பர்pசோதகர்கள்;, பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,  டெங்குநோய் தடுப்பு உத்தியோகத்தர்கள் என நூற்றிற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து களப்பரிசோதனையில் ஈடுபட்டனர்.

களப்பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் மக்களிடம் கையளித்தனர்.


Advertisement