அமெரிக்காவில் ஒன்லைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்க அனுமதியில்லை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அவர்கள் படிக்கும் பல்கலைக்கழக பாடப்பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டால், தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நேரடியாக கல்வி கற்கும்படி அவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை மாற்றி கொண்டால் மட்டுமே, அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்த விதிகளை மீறி அங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை (ஐசிஇ) தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தற்போது வகுப்புகள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவால் எவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக வருகின்றனர்.

தங்கள் பல்கலைக்கழக விடுதி வளாகங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் புதிய கல்வியாண்டு தொடர்பாக அனைத்து கல்வி பாடத்திட்டங்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் பயிற்றுரைகள் ஆன்லைன் மூலமாக அனுப்பப்படும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் கோடை மற்றும் வசந்த கால பாடத்திட்டங்களில் ஆன்லைனில் படிக்கும் மாணவர்களும் தொடர்ந்து அவ்வாறு தொடர அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை (ஐசிஇ) நடத்தும் எஸ்இவிபி பாடத்திட்டம் முன்னதாக அனுமதித்திருந்தது.

ஆனால் திங்கள்கிழமையன்று வெளியான அறிவிப்பின்படி, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் படிப்பதற்கு தங்களை பதிவு செய்த மாணவர்கள், நேரடியாக வகுப்பறையில் கற்கும் வகையில் தங்கள் பாட திட்டத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்த புதிய விதி F-1 மற்றும் M-1 வகை விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். தொழிற்கல்வி மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள்.

2019 நிதியாண்டில் 3, 88,839 எஃ ப் வகை விசாக்களும், 9,518 எம் வகை விசாக்களையும் சம்பந்தப்பட்ட அமெரிக்க அரசுத்துறை வழங்கியுள்ளது.

2018-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு 45 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருந்ததாக அமெரிக்க வணிகத்துறையின் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.Advertisement