தப்லிக் ஜமாத் கூட்டத்திற்கு எதிரான வழக்கு ரத்து

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன என தங்கள் தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்


விசா விதிகளை மீறி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது பெருந்தொற்று நோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்த வெளிநாட்டவர்களை தவிர, இவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த நிஜாமுதீன் மசூதியின் அறங்காவலர்கள் மற்றும் ஆறு இந்தியர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.


ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபெளடி, பெனின் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்தனர்.


ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணவுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக மனுதாரர்கள் கூறினர்.


விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தாங்களுக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


'தப்லிக் ஜமாத்வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்': மும்பை உயர் நீதிமன்றம்பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அஹமத்நகர் மாவட்டத்தை வந்தடைந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.


மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஹோட்டல் மற்றும் தங்குமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், இவர்கள் தங்கிக்கொள்ள மசூதி அனுமதித்தது.


தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.


அவர்கள் தங்கிய இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தங்கள் விசாவின் விதிமுறைகளின்படி மசூதி போன்ற மதம் சார்ந்த இடங்களை பார்வையிட எந்தத் தடையும் இல்லை என்று வாதிட்டனர்.


இந்நிலையில், மனுதாரர்கள் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் மசூதிகளை பார்வையிட சென்றதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.


கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர்

தப்லிக் ஜமாத் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

மேலும் இதில் ஐந்து வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.


இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி நளவாடே எழுதிய தீர்ப்பில், "வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை," என்ற குறிப்பிட்டார்.


மேலும், "தப்லிக் ஜமாத் என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். ஒவ்வொரு மதமும் காலப் போக்கில் மாற்றத்தை சந்திக்கிறது. உலகம் மாறிக்கொண்டே வர, மாற்றங்களை யாரும் தவிர்க்க முடியாது. சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.


அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்" என்று நீதிபதி நளவாடே தனது தீரப்பில் தெரிவித்துள்ளார்.


தனது தீர்ப்பில் "அதிதி தேவோ பவா" அதாவது "நம் விருந்தினர்கள் கடவுன் போல" என்று இந்திய வழக்கம் குறித்தும் நீதிபதி நளவாடே குறிப்பிட்டுள்ளார்.


'தப்லிக் ஜமாத் வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்': மும்பை உயர் நீதிமன்றம்பட மூலாதாரம்,GETTY IMAGES

"நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


சிஏஏ மற்றும் என்ஆர்சி போராட்டங்கள்

முக்கியமாக இத்தீர்ப்பில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிஏஏ மற்றும் என்ஆர்சி போராட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.


'தப்லிக் ஜமாத் வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்': மும்பை உயர் நீதிமன்றம்பட மூலாதாரம்,GETTY IMAGES

"2020 ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 2019 சிஏஏ சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதென போராட்டம் நடத்தினர். முஸ்லிம் அகதிகளுக்கு, குடிபெயர்பவர்களுக்கும் இந்திய பிரஜை என்ற உரிமை கிடைக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது."


தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது. இதற்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


கடந்த ஜுன் மாதம், வெளிநாடுகளை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அவர்கள் இங்கு பல கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்றும் மத்திய அரசு அவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.Advertisement