பாதுகாப்பு அமைச்சர் பதவியை இலங்கை ஜனாதிபதி விட மறுப்பதேன்?


#RA.Pirasaath.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்படாமை தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.


9ஆவது நடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றிருந்ததுடன், அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை கைப்பற்றியது.


இந்த நிலையில், கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது, 28 அமைச்சர்களுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.


அதில் 27 அமைச்சுக்களுக்கான நியமனங்கள் அந்த இடத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்தது.


எனினும், அந்த நிகழ்வின் போது ஒரு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டது.


இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படவுள்ளதாக அந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், அரச ஊடகங்களும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தன.


இலங்கை "தமிழர் பூமி" - விக்னேஷ்வரனின் உரைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

இலங்கை: தமிழர்களின் சுயவுரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் ஒலித்த விக்னேஸ்வரன்

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் முதலாவது அமைச்சாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பதவியை கோட்டாபய விட மறுப்பதேன்?பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவருக்கு நாட்டிலுள்ள எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது என கூறப்பட்டு வந்த பின்னணியிலேயே கோட்டாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், அமைச்சரவை தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ஆம் தேதி ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிட்டது.


அவ்வாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.


பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ என விசேட வர்த்தமானி அறிவித்தலில் எந்தவொரு இடத்திலும் கூறப்படவில்லை.


இது தற்போது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.


 


19ஆவது அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார்.


 


அமைச்சுக்களை பொறுப்பேற்போர், அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக சத்திய பிரமாணம் செய்யாதிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.


 


ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அது அரசியலமைப்பை மீறும் செயல் என்பதை கருத்திற் கொண்டும், அவர் அந்த பதவியை உத்தியோகப்பூர்வமாக ஏற்காதிருக்கலாம் எனவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.


ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சை உத்தியோகப் பற்றற்ற முறையில் பொறுப்பேற்று நடத்தி வருவதாகவும் சில உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் பிரபல சட்டத்தரணி ராஜகுலேந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது.


அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 42ஆவது சரத்தின் 3ஆவது உபப் பிரிவின் பிரகாரம், ஜனாதிபதி அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்பதுடன், அமைச்சரவையின் தலைவராகவும் இருத்தலும் வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதன்படி, ஜனாதிபதி அமைச்சரவையில் அங்கம் கொள்ளலாம் என்ற பொருளை கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார்.


அதனால், ஜனாதிபதி அமைச்சரவையின் கட்டாய ஒருவராக 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


19ஆவது திருத்தத்தின்படி, ஜனாதிபதி அமைச்சர் பதவியை ஏற்றல் தவிர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.


அதனால், தன்னுடைய அமைச்சை அவர் ஏற்றுக்கொண்டு, பின்னர் அந்த அமைச்சை வர்த்தமானியின் ஊடாக வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சர் பதவியைவிட மறுப்பதற்கான காரணம் என்னவென்பது தொடர்பிலும் பிபிசி தமிழ் வினவியது.


இலங்கை அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரே பாதுகாப்பு படைகளின் தலைவர் என கூறப்பட்டுள்ளதுடன், யுத்தத்தை அறிவிக்கவும், சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான உரிமையை கொண்டவராகவும் அவர் இருப்பதாக சட்டத்தரணி ராஜகுலேந்திரன் தெரிவிக்கின்றார்.


இதனால், இலங்கை ஜனாதிபதி வசம் பாதுகாப்பு அமைச்சு இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக  ராஜகுலேந்திரன் கூறுகின்றார்.