#யோஷீஹிடே சுகா, யோஷீஹிடே சுகா


 


ஜப்பானின் புதிய பிரதமராக யோஷீஹிடே சுகாவை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.


ஜப்பான் ஆளும் கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இந்த வாரம் அவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.


பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல்நலக் குறைவை காரணமானாகக் கூறி சென்ற மாதம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.




இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு இதுவரை தலைமை அமைச்சரவை செயலாளராக இருந்த சுகா பிரதமர் பதவிக்கு வருவதை உறுதி செய்துள்ளது.


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்?

ஜப்பான் மக்களின் வெற்றியின் ரகசியம்: 'இக்கிகை' தத்துவம்

இவரைப் பற்றிய சில முக்கியத் தகவல்களின் தொகுப்பு.


ஜப்பானின் முன்னணி அரசியல்வாதிகள் பெரும்பாலும் பலமான பொருளாதார பின்னணியை உடையவர்களாக இருக்கும் சூழலில் யோஷீஹிடே சுகா, அவர்களிலிருந்து சற்று வேறுபட்டவராக இருக்கிறார். இவரது பெற்றோர் ஸ்ட்ராபெரி வேளாண்மை செய்து வந்தவர்கள்.

பிரதமருக்கு அடுத்த அதிகாரம் மிக்க தலைமை அமைச்சரவை செயலர் பதவியில், 2012 முதல் இவர் எட்டு ஆண்டுகள் இருந்துள்ளார்.

தற்போது 71 வயதாகும் சுகா அரசியலில் நுழைவதற்கு முன்பு சுதந்திர ஜனநாயக கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு செயலாளராக பணியாற்றியுள்ளார்.

மாநகராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை தனது ஆரம்ப கட்ட அரசியல் வாழ்க்கையில் வகித்த சுகா 1996ஆம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுகா

பட மூலாதாரம்,REUTERS

ஜுனிசிரோ கொய்சுமி ஜப்பான் பிரதமராக பதவி வகித்த போது 2005ஆம் ஆண்டு இவர் முதல்முறையாக மத்திய அமைச்சரானார்.

ஷின்சோ அபே வின் அமைச்சரவையில் அதிகாரம் மிக்க ஒருவராக இருந்த சுகா, செயல்திறனும் நடைமுறை யதார்த்தத்திற்கு ஏற்ப முடிவு எடுப்பதற்கும் அறியப்படுகிறார்.

ஜப்பான் மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிபுரியும் வயதில் இருப்பவர்கள் விகிதம் குறைந்து வருகிறது. இவருக்கு இது ஒரு முக்கிய சவாலாக இருக்கும்.

அடுத்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை மட்டுமே இவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று ஜப்பானில் உள்ள சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


ஆனால் திங்களன்று இவரை நாடாளுமன்ற கட்சியின் தலைவராக ஆளும்கட்சி தேர்ந்தெடுத்த போது பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் கட்சிக்குள்ளும் இவருக்கு பெரிய செல்வாக்கு இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும் பெரும்பாலும் அறியப்படாத அரசியல் தலைவராக இவர் இருப்பதால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு இவரை முன்னெடுக்க சுதந்திர ஜனநாயக கட்சி விரும்பாது என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.