தலைவர் அஷ்ரஃப் தசாப்தங்களாகிப்போன பெருநிழல்.

 


இரு தசாப்தங்களாகிப்போன பெருநிழல்.


எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக முழு தேசமே அன்னார்ந்து பார்த்து அதிசயித்த அஷ்ரஃப் என்கிற அரசியல் பேராளுமையை பற்றி எழுதாமலும் இருக்க முடியாது என்கிறது என் பேனா.

ஐக்கிய தேசிய கட்சி சேனாநாயக்கவையும் சுதந்திர கட்சி பண்டாரநாயக்காவையும் நினைவுகூர்வதை போல, ஜேவிபி ரோஹனவை நினைவுகூர்வதை போல வசதியாக கடந்துவிட்டு போவதல்ல தலைவர் அஷ்ரஃபை நினைவுகூர்தல் என்பது.

அஷ்ரஃப் என்பது இந்நாட்டு முஸ்லிம் தேசியத்திற்கு முகவுரை தந்தவனின் கதை.
அஷ்ரஃப் என்பது சாதாரணமாய் வந்து பின்நாளில் சரித்திரமாகிப்போனவனின் கதை.

இலட்சோப இலட்சம் மக்கள் ‘தலைவன்’ என்று உரிமையோடு முழங்குவதற்கும் - அதே மக்கள் கூட்டத்திற்கு நேர்மை விலகாமல் தலைமை கொடுப்பதற்கும் அஷ்ரஃப் எனும் அரசியல் பாத்திரம் கணகச்சிதமாய் பொருந்தியது.

சட்டக்கல்லூரி நுழைவு பெற்று ஒரு சட்டத்தரணியாக வெளிவந்த அஷ்ரஃப், தமிழர் விடுதலைக் கூட்டணியோடு தன் அந்திமகால அரசியல் பிரவேசத்தை துவக்கினார்.

1977 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலை முன்னணியோடு சேர்ந்து போட்டியிட்ட போது தேர்தல் கூட்டமொன்றில் “ஈழத்தை அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத்தராவிடில் தம்பி அஷ்ரஃப் பெற்றுத்தருவான்” என்று உதிர்த்த அஷ்ரஃபின் வார்த்தைகள் அப்போதுகளில் தமிழ் சமூகத்தால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.

பள்ளிக்காலம் தொட்டே எழுத்தாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் இருந்த அஷ்ரஃபின் பன்முக ஆளுமைகளை பட்டை தீட்டி பறைசாற்றும் பணியை அரசியல் அரண் மிக லாவகமாக செய்தமை,

பிற்காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை துவக்கி வியாபிக்கச் செய்து முஸ்லிம் அரசியலுக்கே மிகப்பெரும் பிரமாண்டத்தையும் பலத்தையும் கொடுத்தது எனலாம்.

1981 செப்டெம்பர் 21 அன்று அகமட் லெப்பையை தலைவராக கொண்டு காத்த மண்ணில் உதயமான முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கம்,

1986 இல் அரசியல் கட்சியாக பதிவு செய்து அஷ்ரஃப் எனும் ஆளுமையை தலைவராக வழிமொழிந்து வடகிழக்கு மண்ணெங்கும் அரசியல் பாடம் எடுக்க துவங்கியது.

முஸ்லிம் காங்கிரஸ் முகங்கொடுத்த 1988ம் ஆண்டின் முதலாவது மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட-கிழக்கில் 17 ஆசனங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 29 ஆசனங்களை பெற்று கர்ச்சித்து நின்றது. அசூர வளர்ச்சி கண்டு அன்னார்ந்து பார்த்தது தேசம்.

‘தலைவர்கள் உருவாகுவதில்லை! தலைவர்கள் பிறக்கிறார்கள்!‘ என்ற மாபெரும் தத்துவத்தின் பேருதாரணமாய் பின்நாளில் அஷ்ரஃப் எனும் அசாத்திய ஆளுமை மக்களால் உணரப்பட்டது.

எம்.பி ஆகவோ அமைச்சராகவோ எந்தப்பதவியிலும் இல்லாமல் இருந்து கொண்டே அரசியலமைப்பின் 15வது திருத்தமாக பாராளுமன்ற உறுப்பினர் பிரவேச வெட்டுப்புள்ளியை 12.5% இலிருந்து 5% ஆக குறைத்து ஒரே இரவில் செய்து முடித்த காரியம்,

ஒலுவில் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என உரிமை அரசியலோடு இணைந்த பரந்துபட்ட நிலைபேறு அபிவிருத்திகளை மூட்டை கட்டி கொண்டுவந்து செய்து காட்டிய செம்மல் அஷ்ரப்.

அஷ்ரஃப் வென்றுவிட்டாரல்லவா?

இப்படிப்பட்ட பேராளுமையை எப்படி எழுதாமல் இருக்க சொல்கிறீர்கள்?!!

1989 இல் தன் கன்னி பாராளுமன்ற பிரவேசத்தின் மூலம் தன் பாராளுமன்ற அரியாசனத்தை முத்தமிட்டுக் கொண்டார் அஷ்ரஃப்.

கட்சியை பேரியக்கமாக பரிணமிக்கச்செய்து இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் அத்தியாயமாக திகழ்ந்த,

அஷ்ரஃப் என்கிற ஒரு போராட்டக்காரனின், அக்கினி குழம்பிற்குள் இருந்து எழுந்து வந்து விமோசனம் தந்த பெருமகனின் முடிவுரை அவ்வளவு இலகுவில் எழுதப்பட்டுவிடும் என்று இறைவனையன்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

2000 செப்டெம்பர் 16.
இரவாகி போன பகல் அது.
தலைவன் என்று தூக்கி வைத்து கொண்டாடிய சமூகத்தின் சந்து பொந்துகளெங்கும் மரண ஓலங்கள் ஒளிபரப்பப்பட்டன.

‘தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் மரணித்து விட்டார்’ என்கிற செய்தி பேரிடியாக காதுகளை கிழித்தது.

கண்ணீராறு கரைபுரண்டோட,
கதியற்ற மக்கள் கூட்டம் கதறியழ, சரித்திரமாய் வீற்றிருந்த சமூகத்தலைவன்
சரிந்து போகிறான்!

ஒரு நூற்றாண்டோடு சேர்த்து ஒரு ஒப்பற்ற தலைவனுக்கும் ‘முற்றும்’ என்றது இரண்டாயிரம் ஆண்டு. அவ்வளவுதான்.

இது தான் முஸ்லிம் அரசியல் தடுமாறி, தடம்மாறி, திசைதொலைத்த புள்ளி.

இந்தப்புள்ளியின் பின்னரான முஸ்லிம் அரசியலை, அதன் பின் வந்த மேய்ப்பர்களை, உரிமைகள் களவு போன போது சொல்லப்பட்ட சாக்குப்போக்குகளை, வெற்றிடமாய் கழிந்த இருதசாப்தங்களை,

தலைமைத்துவ வெற்றிடத்தை நுரை கொட்டி நிரப்பிய கதைகளை எல்லாம் பற்றி எழுதுவதாயின் தாள்க்கணக்கில் எழுதலாம். பேசுவதாயின் நாள்க்கணக்கில் பேசலாம்!!

அஷ்ரஃப் மரணித்தது அல்லது கொல்லப்பட்டது ஒரு தடவை தான்.
ஆனால் அவரின் கொள்கைகளும், அபிலாஷைகளும் நாளுக்கு நாள் கொல்லப்படுகின்றன.

ஒரு கட்டுரைக்குள் அடங்க மறுப்பவனே,
அடையாளம் தந்துவிட்டு அமைதியாகி போனவனே,
முகவரி தந்துவிட்டு மூர்ச்சையாகி போனவனே,
இரு தசாப்தங்களாய் எம் இருதயத்துள் உனை இருத்தாட்டி வைத்திருக்கிறோம்!!

உன் கப்றுடைய நாட்களும் மறுமை வாழ்வும் ஈடேற்றம் பெற இருகரமேந்துகிறோம்!!

-சல்மான் லாபீர்


Advertisement