போதைப்பொருள் பாவனையிலிருந்து எம் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?




(ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் படியுங்கள்)


அன்பின் பெற்றோர்களே! நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிய நினைப்பீர்களா? ஒரு தாய் பத்து மாசம் சுமந்து, பெற்று, பாராட்டி, சீராட்டி, தன் இன்பங்களையெல்லாம் துறந்து, பல அர்ப்பணிப்புகளை செய்து தன் மகனை சான்றோனாக ஆக்கப் பாடுபடுகிறாள். அதேபோல் தந்தையும் தன் பிள்ளை தன்னைவிட கல்வியில், ஒழுக்கத்தில், ஆளுமையில் மிகைக்க வேண்டும் என நாயாய், பேயாய் பாடுபடுகின்றான். மொத்தத்தில் பெற்றோரின் இன்றயை இலக்கு தம் பிள்ளை கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேலோங்கி, சாதனைகள் படைத்து, சமூகத்தில் ஒரு உச்ச நிலையை அடைய வேண்டும் என்பதாகும். அதற்காக அவர்களின் அர்ப்பணிப்பு எழுத்தில் இயம்ப முடியாது. 


ஒரு பிள்ளை டீனேஜ் வயதை அடையும் வரை அந்த பிள்ளையின் மீதான பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் செல்வாக்கும், கண்காணிப்பும் அதிகமாக காணப்படுவதால் அப்பிள்ளை பெற்றோரினதும்,  ஆசிரியர்களினதும் கட்டுப்பாட்டில் வளர்கிறது. அப்பிள்ளை டீனேஜ் வயதை அடைந்ததும், புறச் சூழலிலுள்ள காரணிகளால் தாகத்துக்கு உள்ளாகின்றான். இந்த காலத்தில் அப்பிள்ளை ஆசிரியர், பெற்றோர்களின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட ஆரம்பிக்கின்றான். நண்பர்களினதும், புதிதாக பழகுபவர்களினதும் உறவை பெரிதாய் மதிக்கின்றன. ஆனால் பெற்றோர், ஆசிரியர்களின் புத்திமதிகளை புறம்  தள்ளுகின்றான். இந்த காலத்தில்தான் அந்த பிள்ளையின் மீதும், அவன் நடவடிக்கைகளின் மீதும் பெற்றோர் உச்ச கரிசனையும், அன்பும் காட்ட வேண்டும். இந்த காலத்தில் பிள்ளை புதிய வஸ்துக்களின் மீது கவனத்தை செலுத்துகின்றது. மட்டுமல்லாது பிறரின் ஜாலங்களை பிள்ளை இலகுவாக உள்வாங்கிக் கொள்கிறான்.  


ஒரு பிள்ளை வழிகெடுவதற்கு அந்த பிள்ளையின் வீட்டுச்சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. சில பிள்ளைகளுக்கு பெற்றோரின் முறையான அன்பு, பாசம் போன்றன கிடைப்பதில்லை. தந்தை அல்லது தாய் அல்லது இருவரும் பிள்ளையை விட்டு தூர இடங்களில் வாழும் சந்தர்ப்பங்களில் அப்பிள்ளைக்கு யார் நேர்வழிகாட்டுவது? மேலும் அளவுக்கதிகமான பாசமும் பிள்ளையை வழிகெடுக்கின்றது. உதாரணமாக வெளிநாட்டில் இருக்கும் தந்தை தன் பிள்ளைக்கு அன்புக்காக மொபைல் போன், டெப், லேப்டப், மோட்டார் சைக்கிள், வாகனம் போன்ற சாதனங்களை வாங்கிக்கொடுக்கிறார். பிள்ளையின் தகுதிக்கு மீறிய பொருட்கள் பிள்ளையை நாளடைவில் அழிவுப்பாதைக்கு செல்ல வழிகோலுகிறது. 


மேலும் சில பிள்ளைகளுக்கு பெற்றோர், தேவை அறியாது பணத்தை கொடுக்கின்றனர். மேலும் தூர இடங்களில் தந்தை இருக்கும் சில பிள்ளைகள் குடும்ப செலவுகளை செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் கையில் நிறைய பணம் தவழுகிறது. பணம் மட்டுமல்ல வறுமையும் பிள்ளைகள் வாழ்கையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக அமைகின்றன. 


இந்த சூழ்நிலைகளுக்கு வசப்பட்ட பிள்ளைகள் காலக்கிரமத்தில் புகைப்பழக்கம், மது, போதைப்பொருள் போன்றவற்றிற்கு அடிமையாகின்றார்கள். துளிர்விட்டு விருட்ஷமாக வேண்டிய இவர்களது வாழ்க்கை இளவயதிலேயே கருகிப்போய் விடுகின்றது. ஆகவே பெற்றோர்களே! உங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றுங்கள். பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றி உங்கள் பிள்ளைகளை கவனமாக வளர்க்க  முயற்சி செய்யுங்கள். 


1. சில பிள்ளைகளுக்கு தந்தையை கண்டாலே அலெஜிக். சில தந்தைகளின் முகத்தில் சிரிப்பு என்பதே இருப்பதில்லை. எந்த வேளையிலும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொள்வார். இதனால் பிள்ளைகள் தந்தையை ஒரு எதிரியாக பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆகையால் சிறு பராயம் முதல் பிள்ளைகளுடன் அன்பாகவும், சற்று கண்டிப்புடனும் நடந்து கொள்ளுங்கள். 


2. சிறு பராயம் முதல் பிள்ளைகளுக்கு ஒழுக்கம், மார்க்கம், நன்னெறிகள், நற்பண்புகளை ஊட்டி வளருங்கள். தர்மம், புண்ணியம், கருணை, மனித நேயம், நீதி, நியாயம், குற்றம், தண்டனை போன்றவற்றை இயம்புங்கள்.  


3. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கும் வாக்குறுதியை முறையே நிறைவேற்றுங்கள். நிறைவேற்ற முடியாத ஒன்றை தருவதாக பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுக்காதீர்கள். மேலும் பிள்ளைகளுக்கோ, பிள்ளைகளின் முன் பிறருக்கோ பொய் கூறாதீர்கள். உதாரணமாக தந்தையை தேடிவரும் ஒருவருக்கு, பிள்ளைகளின் முன்னிலையில், தந்தை வீட்டில் இருக்கும் நிலையில், அவர் வெளியே சென்றுள்ளார் எனவும் கூற வேண்டாம். இது தந்தை மீதான பிள்ளையின் நம்பிக்கையை குறைக்கும். 


4. உங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது அன்பை வெல்லுங்கள். தொழில்; தொழில், உழைப்பு; உழைப்பு என்றும் மட்டும் நின்று விடாமல் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் நேரத்தில் கணிசமான அளவை ஒதுக்குங்கள். பிள்ளைகளின் தேவையை அறியுங்கள்; அவர்களின் நியாயமான ஆசை, தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். பிள்ளைகளோ அல்லது நீங்களோ வெளியே இருக்கும்போது அவர்களுடன் தொலைபேசியில் உரையாடுங்கள்; குறும்செய்தி அனுப்புங்கள். அவர்களுடன் அன்பாக பழகுங்கள். அவர்களின் நெருங்கிய நண்பன் நீங்கள்தான் என்பதை வெளிப்படுத்துங்கள். கால, நேரம் சாத்தியப்படும்போது குடும்பத்துடன் வெளியூர்களுக்கு உல்லாசப்பயணம் செல்லுங்கள். இது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  இடையேயான நெருக்கத்தை கூட்டும். சந்தர்ப்பம் வரும்போது புகைத்தல், மது, போதைப்பொருட்களின் தீங்குகளை பிள்ளைகளுடன் கலந்துரையாடி, அந்த செய்தியை அவர்களின் உள்ளத்தில் பதிய செய்யுங்கள். 


5. எக்காரணம் கொண்டும் கணவன் மனைவி சண்டைகளை பிள்ளைகளின் முன் வைத்துக்கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்யும்போது பிள்ளைகளின் ஒழுக்க விளுமியங்கள் பாதிக்கப் படுகின்றன. 


6. போதைப்பொருளின் தீங்குகள் பற்றி பிள்ளைகளுக்கு ஆழமான அறிவை வழங்குங்கள். இது ஒரு சட்ட விரோத செயல் என்பதையும், இதனால் ஏற்படும் உடல் உள ரீதியான இழப்புகளை போதியுங்கள். இது மனித நரம்பு மண்டலம், மூளை ஆகியவற்றை பாதித்து, சிந்தனை சக்தி, நினைவாற்றலை இல்லாமல் செய்து கல்வியை பாதிக்க செய்வதையும் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். மேலும் இது மனிதனை அதற்கு அடிமையாக்குவதையும்,  அதனால் உண்டாகும் சமூகவிரோத மற்றும் குற்றச்செயல்களையும் பிள்ளைகளின் உள்ளங்களில் பதியுங்கள்.  


7. போதைப்பொருள் பாவிப்பவர்களுக்குள்ள சமூக அங்ககீகரமின்மை, முகவசீகரம் அற்றுப்போதல், பணவிரயம், ஓட்டாண்டியாகுதல், களவெடுத்தல், கொள்ளையடித்தல், பிச்சை எடுத்தல் போன்ற செயல்களை சுட்டிக்காட்டுங்கள். 


8. உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் விடயத்தில் ஜாக்கிரதையாய் இருங்கள். அவரை தேடி யார் வருகிறார், அவர் எங்கே போகிறார், அவரின் பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை விநோதங்கள் எவை என்பதில் கவனம் செலுத்துனங்கள். மேலும் பிள்ளையின் பாக்கெட்கள், புத்தகப்பை, மேசை லாச்சி, அறை மற்றும் உடைமைகள் என்பவற்றை அவருக்கு தெரியாமல் சோதனை இடுங்கள். 


9. வீட்டிலே பிள்ளைகளுக்கு சில ஒழுங்குகளை வகுத்து அதை அமுலாக்குங்கள். உதாரணமாக காலையில் எழும்பும் நேரம், பிள்ளைகள் எல்லோரும் மாலையில் வீடு வந்து சேர வேண்டிய நேரம், காலையில் ஜன்னல் கதவுகளை யார் திறப்பது, மாலையில் யார் மூடுவது, கற்கும் நேரம், வழிபாடுகளுக்கான நேரம்,  இவ்வாறு பிள்ளைகளுக்கு பொறுப்புக்களை பட்டியலிட்டு ஒப்படையுங்கள். 


10. உங்கள் பிள்ளையிகளுக்கு வாழ்க்கையில் உயர்ந்த மகான்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு,  அவர்களும் அவர்களை அடியொற்றி நடக்க வேண்டும் என கூறுங்கள். அப்படிப்படடவர்கள் உங்கள் குடும்பத்தில் அல்லது அண்டைவீட்டில் இருக்கலாம். நேரம் கிடைக்கும்போது அப்படிப்படடவர்களுடன் உங்கள் பிள்ளைகளை கலந்துரையாடுவதற்கு வழியமைத்து கொடுங்கள். 


11. பிள்ளைகளுக்கு சிறு பராயம் முதல் உள்ளத்தில் நம்பிக்கையை ஊட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை தூண்டுங்கள். அவர்களது கற்றலுக்கு தேவையானவற்றை வழங்குங்கள்.  பாடசாலையில் ஆசிரியரை மதிக்க வேண்டும் என்பதை வீட்டிலேயே சொல்லிக் கொடுங்கள். மேலும் பிள்ளையை பற்றி ஆசிரியர்களிடம் அடிக்கடி வினவுங்கள். 


12. உங்கள் பிள்ளையை விளையாட்டு, சமூகசேவை போன்றவற்றில் ஈடுபடத் தூண்டுங்கள். அவர்களது அவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குங்கள். மேலும் குடும்பத்தில் யாராவது ஒரு பிள்ளை வீட்டில் குழப்படி செய்யின் அந்த பிள்ளை பிரிந்து விடாமல் உங்கள் பிள்ளையுடன் சேர்த்து புகலிடமளியுங்கள். 


13. பிள்ளை பாடசாலையிலும், புறச்சூழலிலும் எதை உண்ணுகிறான், எதை குடிக்கிறான் அல்லது வேறு ஏதாவது வஸ்துக்களை நுகர்கிறானா என்ற விடயத்தில் கவனமாய் இருங்கள். 


14. போதைப்பொருள் சம்பந்தமான சட்டங்கள், சமகால நிகழ்வுகள், சமூக விரோத செயல்கள் தொடர்பான அறிவை பெற்றோராகிய நீங்கள் பெருக்கிக்கொள்ளுங்கள். 


15. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோரை போலீசாருக்கு ரகசியமாக காட்டுக்கொடுங்கள். இது ஒரு சமூக விரோத செயல். ஆகையால் யாருக்கும் தயவு, தாட்சண்யம் காட்டத் தேவையில்லை.  


மேற்போன்ற கருத்துக்களை உங்கள் சிந்தனையில் எடுத்து நடக்கும்போது உங்கள் பிள்ளைகளை நீங்கள் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றியதுடன், எமது சமூகதையும், இந்த நாட்டையும்  போதைப்பொருள் அற்ற பிரதேசமாக மாற்ற உதவி செய்தவர்களாவீர்கள். 


பொறுமையுடன் வாசித்தமைக்கு என் நன்றிகள். 


ஏ. பீ. இஸ்ஸதீன்