வடிவேல் பாலாஜி மரணம் - கடைசி காலத்தில் மருத்துவ கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த குடும்பம்பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 .
வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையால் வடிவேல் பாலாஜியின் குடும்பம் தவித்தது.

பிறகு சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்து ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் நிலையில், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று காலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

காணொளி வடிவில் இந்த செய்தியை பிபிசி யூ-ட்யூப் பக்கத்தில் பார்க்க:வடிவேல் பாலாஜிக்கு என்ன நேர்ந்தது? காமெடி நடிகருக்கு நேர்ந்த துயரம்

தமிழக சின்னத்திரையில் பிரபல நடிகராக வடிவேலு பாலாஜி விளங்கினார். மதுரையில் பிறந்த அவர் திரைப்பட நடிகர் வடிவேலு மீது அளப்பரிய அன்பு கொண்டவர். அதனாலே தன் பெயருக்கு முன்னால் வடிவேலு என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.

நடிகர் வடிவேலுவின் சாயல் இருப்பதால், அவரைப் போல் உடை அணிந்தவாறு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு கோலமாவு கோகிலா உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கொரோனா பரவல் காலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது தனது வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வடிவேல் பாலாஜி பகிர்ந்து கொண்டார். அப்போது கூட அவர் புன்னகை முகத்துடனேயே காணொளியில் பேசியிருந்தார்.

அவரது திடீர் மரணம், திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிர்ச்சியில் நண்பர்கள்

வடிவேல் பாலாஜியுடன் நெருக்கமாக சின்னத்திரை உலகில் பயணம் செய்த பலரும் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அவருடன் சின்னத்திரை உலகிலும் மேடை நிகழ்ச்சிகளும் 19 வருடங்களாக நடித்த ரோபா சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் கூறி ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.

"எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் வகையில் தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் கட்டிப்போடச் செய்து சிரிப்பலையில் ஆழ்த்தக் கூடியவர் வடிவேல் பாலாஜி. மரணம் இப்படி கூட வருமா என நண்பனுடைய சாவை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது எனது குடும்பத்தினர் கூட அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். 10 நாட்களாக உயிருக்குப் போராடிய அவர் இப்போது நம்மோடு இல்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்த்திப்போம். நல்ல கலைஞனுக்கு கூட இப்படி ஒரு சாவு கொடுப்பதா என இறைவன் மீதே ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. எல்லோருக்கும் பிடித்த கலைஞன் வடிவேல் பாலாஜி" என்று ரோபா சங்கர் தமது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


Advertisement