கொலைக் குற்றவாளி பிரேமலால் ஜயசேகர, சர்வதேச ஊடகங்களில் செய்தியானார்

#இலங்கையில் மரண தண்டனைக் கைதி மக்களவைக்குமரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர நேற்றைய தினம் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். அது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகஙகளில் இடம்பெறக் காரணமென்ன?


       

(முந்தைய செய்தி) 

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டது.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அவரை அழைத்து செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைகால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

பிரேமலால் ஜயசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் நீதிபதியுமான ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த இடைகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள பிரேமலால் ஜயசேகரவின் தெரிவானது, சட்டவிரோதமானது என நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் உத்தரவை பிறப்பித்து, நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், மனுதாரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான வரபிரசாதங்களையும் அனுபவிப்பதற்கு சட்டத்தில் எந்தவித தடையும் கிடையாது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனால், பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொள்ள சட்டத்தில் எந்தவித தடையும் கிடையாது என நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் கூறினார்.

இதன்படி, பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, வெலிகடை சிறைச்சாலை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவித்தல் பத்திரம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியிருந்தது.

தேர்தல் பிரசார ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்த தரப்பினர் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.

பிரேமலால் ஜயசேகர

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்புப்பட்டதாக தெரிவித்து, அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீதான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வந்திருந்தன.

இவ்வாறான பின்னணியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி காலப் பகுதியான ஜுலை மாதம் 31ஆம் தேதி இந்த வழக்கு மீதான தீர்ப்பை இரத்தினபுரி மாவட்ட மேல்நீதிமன்றம் வழங்கியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அன்றைய தினம் தீர்ப்பளித்திருந்தது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலால் ஜயசேகர கொழும்பு - வெலிகடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, இரத்தினபுரி மாவட்டத்தில் 142,037 வாக்குகளை பெற்று அந்த மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கோ அல்லது நாடாளுமன்ற வாக்கெடுப்புக்களில் கலந்துக்கொள்வதற்கோ சந்தர்ப்பத்தை வழங்க முடியாது என சட்ட மாஅதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம், நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு சட்ட மாஅதிபர் இந்த அறிவித்தலை பிறப்பித்திருந்ததாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், எவரேனும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் வாக்குரிமையை கூட இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் சட்ட மாஅதிபருக்கு தீர்மானிக்க முடியாது என அமைச்சர் வாசுதேச நாணயக்கார அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கூறியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நாடாளுன்றத்திற்கு தெரிவானவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் கூட தனது பெயர் இடம்பெற்றுள்ளமையினால், தன்மை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


       Advertisement