சர்ச்சைகளின் கூடாரம் #IPL



 ஐபிஎல் என்று சொன்னவுடனேயே, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த சம்பவம், 12 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் நினைவில் இருக்கிறது.


ஸ்பாட் ஃபிக்ஸிங் (கிரிக்கெட் சூதாட்டம்)காரணமாக சிறைக்குச் சென்றது முதல் நீதிமன்ற வழக்குகள் வரை, ஒவ்வொரு சீசனிலும் , ஐபிஎல் உடன் சர்ச்சைகளுக்கு தொடர்பு இருந்து வந்தது.


இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, ஐபிஎல் எந்தவொரு பெரிய சர்ச்சையும் இல்லாமல் முடிந்துள்ளது. இதற்காக ஒருசமயம் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக ஐபிஎல் ஆணையராக இருந்த ராஜீவ் சுக்லா, பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமல், களத்தில் இருந்து வெளியேறினார்.


பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ராகுல் திராவிட்டை, ஒரு தார்மீக வீரராக ஆக்க வேண்டியிருந்த அளவிற்கு, ஐபிஎல் ன் பெயர் மோசமடைந்தது.


இறுதியில், நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகளும், பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகளும், நல்ல பலனைத் தந்தன. ஆனால் சில சர்ச்சைகள், இன்றும் வேதாளத்தைப்போல, ஐபிஎல்-ன் முதுகில் சவாரி செய்துகொண்டிருக்கின்றன.


முதல் சர்ச்சை: ஸ்ரீசாந்திற்கு கன்னத்தில் பளார்


ஐபிஎல்லின் நெற்றியில் அவதூறுகளின் முதல் கறை, 2008 இல் முதல் ஐபிஎல் தொடரிலேயே படிந்துவிட்டது. 2008 ஏப்ரல் 25 ஆம் தேதி, மொஹாலியில் நடந்த ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இண்டீஸ் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் பின்னர், பரிசு வழங்கும் விழாவிற்கு இடையே, பஞ்சாபின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டிருந்தது, தொலைக்காட்சித் திரையில் தெரிந்தது.


ஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா வெளியேற்றம் - தொடரும் விமர்சனங்கள்

ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா

மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், எதோ காரணத்திற்காக கோபம்கொண்டு, ஸ்ரீசாந்தை கன்னத்தில் அரைந்தார். ஹர்பஜன் சிங் பின்னர் மன்னிப்பு கோரினார். ஆனால் அவர் பதினொரு போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்டணக் குறைப்பு போன்ற தண்டனையையும் சந்திக்க நேர்ந்தது. ஹர்பஜன் சிங்கின் இந்த அறை, கோடிக்கணக்கில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது


அப்போதைய ஐபிஎல் ஆணையராக இருந்த லலித் மோதி, ஹர்பஜன் சிங்குடன் டெல்லியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டியிருந்த அளவிற்கு, இந்த விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தது. பரபரப்பான சூழலுக்கு இடையே ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டுவிட்டு, கூட்டத்தைவிட்டு உடனடியாக வெளியேறினார்.


ஹர்பஜன் சிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹர்பஜன் சிங்


முதன்முறையாக வெளிநாட்டில் நடந்த ஐபிஎல் போட்டி


2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்களவை தேர்தல் காரணமாக, இந்திய அரசு, ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ, முதல் முறையாக வெளிநாட்டில் அதாவது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஒரு பெரிய முடிவை எடுத்தது,


இந்தப்போட்டித்தொடரை அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கண்டுகளித்தனர். ஆனால், அன்னிய செலாவணியில் முறைகேடு செய்ததான சர்ச்சைகளில் , ஐபிஎல் ஆணையர் லலித் மோதி சிக்கினார். வருமான வரித்துறை லலித் மோதியின் அலுவலகத்தில் சோதனை நடத்தி அவரிடம் விசாரித்ததாக செய்தி வந்தது. எனினும் இதை லலித் மோதி மறுத்தார்.


இந்த விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு வருடம் கழித்து, அமலாக்க இயக்குனரகம் லலித் மோதிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. லலித் மோதியும் நீதிமன்றத்திற்குச்சென்றார். பின்னர் பிசிசிஐ யும் அவரிடமிருந்து விலகிச் சென்றபோது, ​​ அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றுவிட்டார். இன்றும், இந்த சர்ச்சை தொடர்கிறது. இதன் எதிரொலியை இப்போதும் நாடாளுமன்றத்தில் கேட்கமுடிகிறது.


எந்த சர்ச்சையுமின்றி நடந்த ஐபிஎல்


2010 ல் ஐபிஎல், எந்த சர்ச்சையும் இன்றி நடந்தது. மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ், இறுதிப் போட்டியில் , மும்பை இண்டியன்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது. ஐபிஎல் அமைதியாக, எந்த பெரிய சர்ச்சையும் இல்லாமல் முடிந்தது. இதன் பின்னர், 2011 ஐபிஎல் போட்டியில், . மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

உலகம் கண்ட ஷாருக்கின் மறுபக்கம்


2012 ஆம் ஆண்டில் நடந்த ஐந்தாவது ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து, கொச்சி டஸ்கர்ஸ் அணி வெளியேற்றப்பட்ட பின்னர் , ஒன்பது அணிகள் களம் இறங்கின. ஐந்து வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக, ஒரு தொலைக்காட்சி சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் (ரகசிய படமாக்கல்) குற்றச்சாட்டு வெளியானது.


பிசிசிஐ , உடனடியாக ஷலாப் ஸ்ரீவாஸ்தவா, டி.பி.சுதேந்திரா, அபிநவ் பாலி, மோஹ்னிஷ் மிஸ்ரா மற்றும் அமித் யாதவ் ஆகியோரை ஐபிஎல் ல் இருந்து இடைநீக்கம் செய்தது. இந்த சம்பவம் காரணமாக , பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆகியவற்றின் மதிப்பு ஆட்டங்கண்டது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்களிப்பில், அணி உரிமையாளர் ஷாருக் கான் , குழந்தைகளுடன் ஆடுகளத்தை அடைந்து தரை ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இதனால், ஷாருக்கான் அரங்கத்திற்குள் நுழைவதன்மீது, பல ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டது.


ஐபிஎல்-ன் பெயர் மிகவும் மோசமடைந்தபோது


இந்த சீசனில், ஐபிஎல் ன் பெயர் நார் நாராக கிழிந்தது. முதலாவதாக, கட்டண விவகாரத்தில் , டெக்கான் சார்ஜர்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டது. மேலும் புதிய அணி , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் உச்சகட்டத்தில் இருந்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சந்தேலா ஆகியோரை டெல்லி போலீசார் , ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டின்பேரில், கைது செய்தனர்.


2015 ஜனவரி 22 அன்று, பந்தய முறைகேடுகள் தொடர்பாக, அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநினிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல்வருமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பந்தய விவரங்களை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், என்.ஸ்ரீனிவாசன், பிசிசிஐ தலைவர் பதவியை விட்டு விலக நேரிட்டது.



பதவியை துறந்த பிசிசிஐ தலைவர்


இந்தியாவில் மக்களவை த் தேர்தல் காரணமாக, இதன் ஆரம்ப பந்தயங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில், அவை நடைபெற்றன. ஆறாவது ஐபிஎல் போட்டியில் ஏற்பட்டது போன்ற அனைத்து சர்ச்சைகளையும் தவிர்க்க முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ தலைவர்


என். ஸ்ரீனிவாசன் , ஐபிஎல் முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் அவர் மீது குற்றம்சுமத்தியது . இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பட்டத்தை வென்றது.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மீதான கட்டுப்பாடுகள்


ஐபிஎல் ன் எட்டாவது பதிப்பு, 2015 ஆம் ஆண்டில், சர்ச்சைகள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையே, தொடங்கியது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் சாம்பியனானது. இறுதிப் போட்டி, மே 24 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு வெளியானது.


முத்கல் கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்க உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரைத்தது. மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு, ஆயுள் தடை விதிக்கப்பட்டது.


குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐபிஎல் சூதாட்டம்- 'குருநாத் மெய்யப்பன் குற்றவாளி'

2016 ஆம் ஆண்டின் ஒன்பதாவது சீசன், குஜராத் லயன்ஸ் மற்றும் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளின் சேர்க்கையுடன் ஆரம்பமானது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை தோற்கடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சாம்பியன் பட்டம் வென்றது. இறுதியில், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப்பிறகு, ஐபிஎல் நம்பகத்தன்மை , ஓரளவிற்கு தப்பிப்பிழைத்தது.


2017 ல், ஐபிஎல் ன் பத்தாவது பதிப்பின் இறுதிப் போட்டியில் , புனே சூப்பர்ஜெயிண்ட்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் பட்டம் வென்றது. ஆனால் பெரிய சர்ச்சைகள் எதுவும் வெளிவரவில்லை.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் இரண்டாண்டுகள் தடை, 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் ராயல் கேப்டன் அந்தஸ்துடன் விளையாடினார். அவர் கிட்டத்தட்ட தன் சொந்த வலுவால், சென்னை சூப்பர் கிங்ஸை மூன்றாவது முறையாக சாம்பியனாக்கினார்.


2019 ஆம் ஆண்டில், ஐபிஎல் பன்னிரண்டாவது சீசன் இறுதிப் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றது. ஐபிஎல் பட்டத்தை , இதுவரை மும்பை இண்டியன்ஸ் நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறையும் வென்றுள்ளன.


கடந்த சில பதிப்புகளாக, சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் ஐபிஎல், நிம்மதிப்பெருமூச்சை விட்டுள்ளது. ஆனால் செல்வம் நிறைந்த ஐபிஎல் உலகம் கடந்தகாலத்தைப்போலவே மீண்டும் சர்ச்சைகளில் சிக்காது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.