.அஸ்தமனமானது, அகஸ்தியா

 53 ஆண்டுகளாக வடசென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய அகஸ்தியா திரையரங்கம் நிரந்தரமாக மூடு விழா கண்டுள்ளது.

திரையரங்குகள். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில், இரண்டறக் கலந்த ஒன்று. பொழுதுபோக்குக்காக இருந்தாலும், மக்களின் இன்ப, துன்பங்களுக்கும், சினிமாக் காதலர்களின் காதலுக்கும் வற்றா வடிகாலாக இருந்தவை திரையரங்குகள் தான். அந்த வகையில், வடசென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக 1967-ம் ஆண்டு முதல் இருந்து வந்தது அகஸ்தியா திரையரங்கம். 1004 இருக்கைகளுடன், 70 MM திரையரங்காக, மிகப் பிரம்மாண்டமாக செயல்பட்டு வந்த அகஸ்தியா திரையரங்கு, எம்.ஜி.ஆர் முதல் லாரன்ஸ் வரை பல்வேறு நடிகர்கள் வந்து வெள்ளிவிழா கண்ட திரையரங்காகவும் விளங்கியது. 

பாமா விஜயம் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டதாகவும், அதன் பின் உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், சொர்க்கம், சிவந்த மண், அபூர்வ ராகங்கள், படிக்காதவன், பைரவி, பிரியா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குஷி, கில்லி, தீனா, காக்க காக்க என்று பல்வேறு படங்கள் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்டதாகக் கூறுகின்றனர்.

53 ஆண்டு பாரம்பரியம் மிக்க திரையரங்கில், கடந்த 3 ஆண்டுகளாகவே முக்கிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படாததால், நஷ்டத்தில் செயல்பட்டு வந்ததாகவும், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், தொடர் நஷ்டம் காரணமாக வடசென்னையின் அடையாளங்களுள் ஒன்றான அகஸ்தியா திரையரங்கு 2020 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

மல்ட்டி பிளக்ஸ், ஓடிடி உள்ளிட்டவற்றின் வருகை, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் திரையரங்குகளை, அழிவின் விளிம்புக்குத் தள்ளுகின்றன என்று எழும் குற்றச்சாட்டுகள் மறுப்பதற்கில்லை. ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், கிருஷ்ணவேணி, நாகேஷ் போன்ற பாரம்பரிய தியேட்டர்கள் முதல் சாந்தி, ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்கள் வரை சென்னையில் தொடர்ச்சியாக அஸ்தமனமாகும் தியேட்டர்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது அகஸ்தியா.Advertisement