கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி



பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சியில் உள்ள மஸ்கான் செளராங்கி பகுதியின் அடுக்குமாடு குடியிருப்பில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். கராச்சி பல்கலைக்கழகம் முன்புள்ள அந்தப் பகுதியில் வெடிச்சம்பவம் நடந்ததாக பிபிசி செய்தியாளர் ரியாஸ் சோஹைல் தெரிவித்தார்.

அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் வங்கி, பல்பொருள் அங்காடி, குடியிருப்புகளுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஐந்து பேர் இறந்திருப்பதாக கண்டறிந்தனர். அதில் மூன்று பேரின் சடலங்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நடந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு பாதுகாவலர் உட்பட 25க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

வெடிச்சம்பவம் நடந்த பகுதியில், கராச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் நடமாட்டம், பெருமளவில் இருக்கும்.

மேலும், அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இரண்டு வங்கிகள் இயங்கி வருகின்றன. அவற்றின் அலுவல் நேரம், காலை 9 மணிக்கே தொடங்கும். சம்பவம் நடந்தபோது வங்கிக்குள் இருந்த ஊழியர் ஷாபெஸ், நெரிசல் நேரத்தில் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென மேல்புற கூரை தரையில் விழுந்ததாக தெரிவித்தார். உடனடியாக வெளியே வந்தாலும், பலர் உள்ளே இடிபாடுகளில் சிக்கி விட்டதாக ஷாபெஸ் கூறினார்.

விபத்து நடந்த பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். ஆரம்பகால விசாரணையில் கட்டடத்தில் இருந்த தனியார் வங்கியொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக வெடிச்சம்பவம் நடந்ததாக கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு வெடிப்பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை எனறும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, கராச்சியின் ஜின்னா காலனியில் செவ்வாய்க்கிழமை மற்றொரு வெடிச்சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் தொடர்பாக மாகாண முதல்வர், அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், சரக காவல்துறை துணைத் தலைவர், முதுநிலை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விடுப்பில் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மற்றொரு வெடிச்சம்பவம் கராச்சியில் புதன்கிழமை ஏற்பட்டிருக்கிறது.