ரிஷாட் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும்


 (க.கிஷாந்தன்)

 

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார். 

 

நுவரெலியா - டயகமவில் இன்று (17.10.2020) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

 

" அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர், உண்மை அதுவல்ல, நாட்டில் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக்காட்டிலும், குறைந்தளவான அதிகாரங்களே '20' ஊடாக ஜனாதிபதிக்கு கிடைக்கும். உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளியான பின்னர் இது தெரியவரும்.

 

நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் அமோக ஆணையை வழங்கினர், அவ்வாறு சேவையாற்றுவதற்கு '19' தடையாக உள்ளது. அது நீக்கப்படும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கு மக்களும் வாக்குரிமைமூலம் அனுமதி வழங்கினர். எனவே, கட்டாயம் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படவேண்டும்.

 

ரிஷாட் பதியுதீன் விவகாரம் தொடர்பான விசாரணை பொறிமுறைமீது எமக்கும் பலத்த சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதர் ஆகியோரிடம் அறிக்கை கையளித்துள்ளோம். நீதி கிடைக்கும் என நம்புகின்றோம். 

 

நீதித்துறையில் நாம் தலையிடவில்லை. எவருடனும் அரசியல் டீலும் இல்லை. நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன.

 

அதேவேளை, ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்பதே எமது கோரிக்கையும். ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனவே, தலைமறைவாகாமல் சரணடையுமாறு வலியுறுத்துகின்றோம்." - என்றார்.Advertisement