பட்டல்கெலே பிரிவில்,மரம் முறிந்து வீழ்ந்துள்ளது


 (க.கிஷாந்தன்)

 

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கல்வியியல் கல்லூரி மாணவி காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

 

இச்சம்பவம் 13.10.2020 அன்று இரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இப்பிரதேசத்திற்கு வீசிய கடும் காற்று காரணமாக வீடுகளுக்கு கீழ் பகுதியில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

 

இம்மரம் வீழ்ந்ததில் சுவர் இடிந்து கட்டிலில் வீழ்ந்ததில் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த கல்வியியல் கல்லூரி மாணவி காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 

குறித்த மரம் வீழ்ந்ததன் காரணமாக வீட்டு உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 

மத்திய மலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரவு வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அடிக்கடி பலத்த மழையும் பெய்து வருகிறது.

 

இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து மின் தடை ஏற்பட்டுள்ளதுடன் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அட்டன் கொழும்பு, அட்டன் நுவரெலியா, அட்டன் டயகம, பொகவந்தலாவ, உள்ளிட்ட பல வீதிகளில் மண்திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

 

இதனால் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மலையகப்பகுதியில்  தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

 

இதனால் மலைகளுக்கும் மண்திட்டுக்களுக்கும் சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இதே வீடுகளுக்கு அருகாமையில் இருக்கும் ஆபத்தான மரங்கள் குறித்த உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அவர்களின் அசமந்த போக்கு காரணமாக இவ்வாறு மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதமேற்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Advertisement