கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் டெல்லி கேபிட்டல்ஸ் தோற்றது ஏன்?


ஐபிஎல் போட்டிகளில் ஷிகர் தவான் தனது முதல் சதத்தை விளாச 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இரண்டாவது சதமடிக்க வெறும் இரண்டு நாட்கள் இடைவெளி மட்டும்தான் தேவைப்பட்டது.

கடந்த சனிக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சத்தத்தை பதிவு செய்த ஷிகர் தவான் நேற்றைய தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சதமடித்து அசத்தினார். ஆனால் அவரது அணி வெற்றி பெறவில்லை. 

புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிறிஸ் கெயில் வருகைக்கு பிறகு யானை பலத்தை பெற்றுள்ளது, 

புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த பெங்களூரு அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்திய பஞ்சாப் அணி, கடந்த ஞாயிற்று கிழமை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களை சந்தித்து வென்று சாதித்தது. நேற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தி இருக்கிறது. 

இனி அவ்வளவுதான் என கருதப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீனிக்ஸ் பறவையை போல எழுந்து வந்து மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து வென்று புள்ளிபட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்திருக்கிறது. 

இது எப்படி சாத்தியமானது?

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரிஷப் பந்த், ஹெட்மேயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த அணியின் துருப்புசீட்டு பந்துவீச்சாளர் அன்ரிச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. 

IPL 2020: Punjab Dhawan's innings, Delhi Capitals

டெல்லி அணியில்  ஷிகர் தவான் சதமடித்தார். ஆனால் அந்த அணி 20 ஓவர்களில் குவித்த ரன்கள் 164 ரன்கள் மட்டுமே. தவானை தவிர  மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து  59 பந்துகளில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் ஷமி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹெட்மேயர், ஸ்டாய்னிஸ், பிரித்வி ஷா என அதிரடி பட்டாளம் இருந்தபோதிலும் அவர்களால் மிகப்பெரிய ரன்களை குவிக்க முடியவில்ல. 

பஞ்சாப் அணி சேசிங் செய்தபோது அந்த அணிக்கு இதுவரை நன்றாக விளையாடி வந்த தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் கிறிஸ் துஷார் தேஷ்பாண்டே ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசித்தள்ளினார். நான்கு ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி தேஷ்பாண்டே வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் 26 ரன்கள் விளாசியது. அந்த ஒரே ஓவரின் முடிவில்  ஆட்டம் பஞ்சாப் பக்கம் நகரத்துவங்கியது. 

கெயிலை ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்தினார். ஆனால் கெயில் விட்ட இடத்தில்  இருந்து மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் வெளுத்துக்கட்டத் துவங்கினார். அவர் 28 பந்துகளில் ஆறு பௌண்டரி மூன்று சிக்ஸர்  விளாசி அரை சதமடித்து ரபாடா பந்தில் அவுட் ஆனார்.  

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பஞ்சாப் அணிக்கு இதுவரை பேட்டிங்கில் சோபிக்காமல் இருந்த மேக்ஸ்வெல் நேற்று ஓரளவு ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை பார்க்கும்போது 16, 17 ஓவர்களிலே சேஸிங்கை முடித்துவிடும் என்பது போன்ற சூழல் இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல்லை ரபாடா வீழ்த்தியதும் ஒரு சிறு பதற்றம் உருவானது. ஆனால் ஜேம்ஸ் நீஷம், தீபக் ஹூடா இணை 19வது ஓவர் முடிவில் இலக்கை எட்டி வென்றது. 

பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடிய விதம் அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் வென்றாலும் தவானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபப்ட்டது. 

இந்த போட்டியில் வென்றால் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்ற சூழல் இருந்த நிலையில், மும்பை மற்றும் டெல்லி அணிகளின் சமீபத்திய தோல்விகள் இந்த ஐபிஎல்லில் இன்னும் ஏதேனும் திருப்புமுனை இருக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.Advertisement