தம்பிலுவிலில்-01 பிரிவில் ஒருவருக்கு கொரோனா


 வி.சுகிர்தகுமார்

தம்பிலுவிலில்-01 பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர் கொழும்பில் பணியாற்றி வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் தேவையற்ற வகையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த பிரதேசம் இன்று மாலை வெறிச்சோடிக்காணப்பட்டது.

இது இவ்வாறிருக்க வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்கள் வெளியிலே நடமாட முடியாது என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ள நிலையில் சிலர் வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நடமாடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறானவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் பொதுமக்களும் தகவல்களை சுகாதாரத்துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் மற்றவர்களது நலன்கருதி குறித்த காலப்பகுதியில் வெளியிலே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்படுகின்றது.
Advertisement