நடிகை குஷ்பு கார் விபத்து


 




பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த நடிகை குஷ்பு பயணம் செய்த கார் மீது கன்டெய்னர் லாரி உரசிச் சென்ற சம்பவத்தில் அவரும் அவருடன் பயணம் செய்தவர்களும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்துள்ள வேல் யாத்திரை என்ற நிகழ்ச்சியை அக்கட்சியினர் முக்கிய முருகன் கோயில்கள் அமைந்துள்ள வழிபாட்டுத்தல பகுதிகளில் நடத்த தீர்மானித்துள்ளனர். ஆனால், யாத்திரையாக அந்த பகுதிகளுக்கு தொடர்ந்து செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

இதனால் பாஜகவினர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முருகனின் வழிபாட்டுத் தல பகுதிகளில் கூடி அங்குள்ள முருகன் கோயிலில் வழிபட்டு, பொதுக்கூட்டம் நடத்தி விட்டு பிறகு மற்ற இடத்தில் மீண்டும் கூடுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, கடலூரில் வேல் யாத்திரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் நடிகை குஷ்பு காரில் பயணம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அவரது கார் புதுச்சேரி செல்லும் சாலையில் சென்றபோது அதே வழியில் பின் பக்கமாக வந்த கன்டெய்னர் லாரி, குஷ்புவின் காரை இடது பக்கமாக வேகமாக உரசியதில் அவரது காரின் பின் பக்க கதவு, முன் பக்க கண்ணாடி பலத்த சேதம் அடைந்தது. இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்திலும் குஷ்பு குறிப்பிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சம்பவம் குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் முருகன் புண்ணியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம். கன்டெய்னர் லாரி இடதுபக்கமாக எங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது உரசியதில் கார் விபத்துக்குள்ளானது. எங்களுடைய ஓட்டுநர் சாமார்த்தியமாக காரை இயக்கியதால் பிழைத்தோம்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கன்டெய்னர் லாரி ஓட்டுநரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இது திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வேறு கார் மூலம் கடலூருக்கு குஷ்புவும் அவருடன் வந்த பாஜகவினரும் புறப்பட்டுச் சென்றனர்.