யாழ்ப் பல்கலை மாணவன் வினோஜ்குமார் சிறந்த நட்சத்திர மாணவரானார்

வி.சுகிர்தகுமார்   

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் Electro Engineering Technology படித்துக்கொண்டிருக்கும் செல்வன் சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களுக்கு இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்திய அரசாங்கத்தினால் அங்கிகாரம் பெற்ற தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் தாய் உள்ளம் புக் ஆஃப் வேர்ல்ட் அச்சீவர்ஸ் நிறுவனமும் இணைந்து இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருது - 2020க்குத் தெரிவு செய்துள்ளனர்.

இவர் இதுவரை 102 கண்டுபிடிப்புக்களையும் 43 தேசிய விருதுகளையும் ஐந்து நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் ஆறு சர்வதேச விருதுகளையும் பெற்றமைக்காகவும் மேலும் இதனூடாக வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை INVENT எனும் இலவச கண்டுபிடிப்பு ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றமை, சூழலியல் புத்தாக்கங்களை ஊக்குவித்தல் போன்றவற்றிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தின் சிறி கோரக்கோவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு இவ்விருது கிடைப்பதற்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியை வாலன்ரீனா இளங்கோவன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் அங்கிகாரம் பெற்ற தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் தாய் உள்ளம் புக் ஆஃப் வேர்ல்ட் அச்சீவர்ஸ் நிறுவனமும் இணைந்து வருடா வருடம் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த நட்சத்திர மாணவன் விருது, சிறந்த சமூக சேவையாளன் விருது, சிறந்த கலைஞன் விருது மற்றும் சிறந்த கவிஞன் விருது ஆகியவற்றை இந்தியாவில்  வழங்கி கௌரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


 Advertisement