பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழு


 


(க.கிஷாந்தன்)

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழுவின் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொவிட் தொற்று நிலைமை காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. அதற்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக சேகரித்து எதிர்வரும் நான்கு தினங்களுக்குள் குறித்த உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய பதுளை மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்பதிவுகளை உடனடியாக இரத்துச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை எந்த வித அவசர நிலைமைகளின் போதும் முகங்கொடுக்கத் தேவையான வைத்தியசாலை வசதிகள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட விவசாய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள், ஊரடங்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் தேனுக விதானகமகே, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, ஷாமர சம்பத் தசநாயக, பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.