யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன


வி.சுகிர்தகுமார்
 

  சக்தி வாய்ந்த யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன. இதனை எமது முன்னோர்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

அதுபோல் மகாலட்சுமி துணையுடன் கிருஸ்ணபகவான்  மகா கொடிய நரகாசூரனை அழித்ததும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ததுமான இக்காலத்தில் கொரோனமா எனும் சூரனை எல்லாம் வல்ல இறைவன் அழிக்க வேண்டும் என பல ஆலயங்களிலும் மேற்கொள்ளப்படும் சக்திமிக்க யாகங்களின் மூலமாக மக்கள் பிரார்த்திக்கின்றனர்.

அவர்களது பிரார்த்தனையை நிறைவேற்றி மக்கள் சுகதேகிகளாக வாழ இறைவன் அருள்புரியவேண்டும் என பிரார்த்திப்பதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தித்து  அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் இடம்பெற்ற  விசேட யாகபூஜை மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனின் வழிகாட்டலில் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கஜமுகசர்மா மற்றும் வித்யாசாகரர் வாமதேவ சிவாச்சார்யார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்குமார் குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் இணைந்து நடாத்திய யாக பூஜையில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் ஆலய தலைவர் பெ.சோமசுந்தரம், செயலாளர் பா.சுதாகர் பொருளாளர் எஸ்.உமாகாந்தன் உள்ளிட்ட ஆலய நிருவாகத்தினர் கலந்து கொண்டனர்.