குழாய் கிணறுகள் கையளிக்கப்பட்டது


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு   4 குழாய் கிணறுகள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு  இன்று(17) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டதுடன் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றிய  தலைவர் மற்றும் ஆலோசகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த குழாய்  கிணறுகளை மக்கள் பயன்பாட்டிற்கு  வழங்கி வைத்தனர்.

குறித்த பகுதிகளுக்கு சென்ற பிரதேச செயலாளரினால் மக்களின் பல்வேறு குறைகள் ஆராயப்பட்டு அவ்விடத்தில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த இக்குழாய் கிணறுகளில் இரண்டினை சுவிஸ் நாட்டில் வதியும் லிங்கன் சுதர்சன் என்பவர் செங்கலடியைச் சேர்ந்த அமரர் சுகிர்த மலர் அவர்களின் நினைவாக அணுசரனை வழங்கி இருந்தார்.
மேலும் மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வதியும் காளி என்பவரினால் ஒரு குழாய் கிணறும் அக்கரைப்பற்றினை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட யசோ ரெட்னா என்பவரின் நிதியுதவியுடன் மற்றுமொரு குழாய் கிணறும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.