42 பேர் உயிரிழப்பு இந்தோனேசியாவில்


இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள மமுஜூ மாவட்டத்தின் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மமுஜூ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதனால் நோயாளிகள், ஊழியர்களில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தேனேசிய தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தில் 600-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement