புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்



 நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய ஒரு புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையை வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. "இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்" என வட கொரியாவின் அரசு ஊடகம் குறிப்பிட்டிருக்கிறது.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில் இப்படிப்பட்ட சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன என வட கொரியாவின் அரசு ஊடகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவியேற்க உள்ள சில தினங்களுக்கு முன், வட கொரியா தன் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா தான் வட கொரியாவின் மிகப் பெரிய எதிரி என கிம் ஜாங் உன் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

வட கொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட படங்களில், அணிவகுப்பின் போது, மக்கள் வட கொரிய கொடியை உற்சாகத்தோடு அசைத்துக் கொண்டிருக்க குறைந்தபட்சமாக நான்கு வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான ஏவுகணைகள் இருப்பதை காண முடிகிறது.

இதுவரை இப்படிப்பட்ட ஆயுதங்களை முன்பு பார்த்ததில்லை. "புதிய ஆண்டு, புதிய புக்கக்சாங்" என வட கொரிய ஏவுகணையின் நீர்மூழ்கிக் கப்பலின் பெயரிலேயே ட்விட் செய்திருக்கிறார் வட கொரிய விவகார நிபுணர் அங்கித் பாண்டா.

ப்யொங்யொங் நகரில், கிம் இல் சங் சதுக்கத்தில் தரைப்படை துருப்புகள், பீரங்கிகளுடன் நடந்த இந்த அணிவகுப்பை, தோல் ஆடை கோட் மற்றும் கம்பளி வகை தொப்பி அணிந்து, சிரித்த முகத்துடன் கையை அசைத்தபடி கிம் ஜாங் உன் பங்கேற்ற படங்களும் வெளியாகியுள்ளன.

வடகொரியா

"வட கொரியாவின் புரட்சிகர ஆயுதப் படையின் பலத்தைக் காட்டும் விதத்தில், உலகின் சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகள் (submarine-launch ballistic missile), கிம் இல் சங் சதுக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்தன" என்கிறது வட கொரியாவின் அதிகாரபூர்வ அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி.

வியாழக்கிழமை (ஜனவரி 14) நடந்த இந்த வணிவகுப்பில், கடந்த அக்டோபர் மாதம், இதை விட பெரிய அணிவகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை intercontinental ballistic missile (ICBM) கொண்டு வரப்படவில்லை. இந்த பிரமாண்ட ஆயுதம் மூலம், அமெரிக்காவின் எந்த பகுதியையும் இலக்கு வைத்து அணு குண்டு தாக்குதல் நடத்தலாம் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

வட கொரியாவின் அணு ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் மேம்படுத்துவேன் என ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் பங்கெடுத்த காங்கிரஸ் கூட்டத்தில் கிம் ஜாங் உன் கூறினார். மேலும் தனது விருப்ப ஆயுதங்கள் பட்டியலையும் அவர் குறிப்பிட்டார். அதில் நிலம் மற்றும் கடலில் இருந்து நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், பெரிய அணு ஆயுத குண்டுகளை சுமக்கும் ஏவுகணைகளும் அடக்கம்.

"யார் அமெரிக்காவின் அதிகாரத்தில் இருந்தாலும், வட கொரியாவுக்கு எதிரான கொள்கைகளில் மாற்றம் வராது. நம் புரட்சிக்குத் தடையாக இருப்பவர்கள் மற்றும் நம் மிகப் பெரிய எதிரி அமெரிக்கா தான்" என கிம் ஜாங் உன் கூறினார்.

வடகொரியா

அமெரிக்காவில் புதிதாக பதவியேற்க இருக்கும் அரசாங்கத்துக்கு, வட கொரியாவின் ராணுவ பலத்தை காட்டும் விதத்தில் இந்த புதிய ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"வட கொரியா பெரிய ராக்கெட் பூஸ்டர்களில் வலுப்பெற்று வருவதை, நாம் கவனிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்" என பண்டா ட்விட் செய்திருக்கிறார்.